அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதைஇருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி
உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,
வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும்,
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்,
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்,
கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும்,
பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர்
மாட மறுகும், மறையோர் இருக்கையும்,
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்,
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்
இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்,
இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத்
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப்
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர,
மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக்
கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோர் ஆர்அமர் அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென
நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி,
இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப்
பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎன
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு,
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்
நுண்வினைக் கம்மியர் காணா மரபின,
துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும்,
வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக்
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்,
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று
வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்,
வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர்
சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,
தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,
மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ,
வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து,
மரகத மணியொடு வயிரம் குயிற்றிப்
பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்
கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து
மங்கலம் பொறித்த மகர வாசிகைத்
தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன்
பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை
பாவை விளக்குப் பசும்பொன் படாகை
தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து
மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு,
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர்ப்பரித் தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி
அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்
புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி,
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்,
நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்,
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்
திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்,
கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்,
கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்யாழ்ப் புலவர் பாடல் பாணரொடு
எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்,
முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்
காதல் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு
இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழிக் குவளை சூழ்செங் கழுநீர்
பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து
காமக் களிமகிழ்வு எய்திக் காமர்
பூம்பொதி நறுவிரைப் பொழில்ஆட்டு அமர்ந்து
நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில்
பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்,
கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு
இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி
அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித்
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்.
நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின்
சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி
மீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த
வான வல்லி வருதலும் உண்டுகொல்.
இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத்
திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி ஆம்என
எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்
கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு
உள்வரி கோலத்து உறுதுணை தேடிக்
கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்.
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப்
பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது
நாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப்
பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப்
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன,
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர்
எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ
விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப்
போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎனக்
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்:
உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து
கள்உக நடுங்கும் கழுநீர் போலக்
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்.