Spread the love

மாவட்டத்தின் தோற்றம்

1790-ல் கிழக்கு இந்தியா கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801-ல் பிரிட்டிஷார் இந்த நகரை கையகப்படுத்தி “Tinnevelly’ மாவட்டம் என பெயரிட்டனர். முதலில் திருநெல்வேலி நகரத்தை அடுத்து அமைந்துள்ள பாளைங்கோட்டையை தலைமையிடமாக கொண்டுதான் இந்த மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பாளையக்காரர்களுககு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்ற போது பாளையங்கோட்டையைத்தான் பிரிட்டிஷார் தங்களது இராணுவ தலைமையிடமாக வைத்திருந்து செயல்பட்டனர். பின் காலங்களில் திருநெல்வேலி நகரை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டதாலும்,   திருநெல்வேலி சீமை என நாயக்கர் நவாப் காலங்களில் அழைக்கப்பட்டதாலும் இது தொடர்ந்து ”திருநெல்வேலி மாவட்டம்” என்ற பெயரில் அழைக்கப்படலாயிற்று. 20-10-1986 முதல் திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி என்ற புதிய மாவட்டமும், கடந்த 12-11-2019 முதல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டமும் உதயமானது. இம்மாவட்டதிலுள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை என்ற இரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்பட்டு எல்லாவிதத்திலும் வேகமாக வளர்ந்தன.

தலபுராணம்

திருநெல்வேலி தலபுராணம், திருநெல்வேலி பெயர் காரணத்திற்கான பாரம்பரியத்தை விவரிக்கிறது. தீவிர சிவ பக்தரான வேதசர்மா என்பவர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி புனிதயாத்திரை மேற்கொண்டார். ஒரு நாள் அவருடைய கனவில் சிவபெருமான் தோன்றி புனித நதியான தாமிரபரணி நதிக்கரையில் தான் குடிகொண்டிருக்கும் கோவிலுக்கு வருமாறு அழைத்தார். அதன்படி சிவபக்தரான வேதசர்மா மகிழ்ச்சியடைந்து தாமிரபரணி நதிக்கரையில் சிந்துபூந்துறை எனும் இடத்திற்கு வந்து அங்கு குடும்பத்துடன் வசித்து வரலானார். ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டதினால் சிவபக்தர் வேதசர்மா வீடு வீடாக யாசகம் செய்து நெல்மணிகளை சேகரித்து தன்னுடைய அன்றாட சிவ பூஜைகளை செய்து வந்தார். ஒரு நாள், யாசமாக கேட்டு சேகரித்த நெல்மணிகளை தாமிரபரணி ஆற்றின் கரையில் காயவைத்துவிட்டு ஆற்றில் இறங்கி குளிக்கச் சென்றார். அப்போது திருநெல்வேலியில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை நீக்கி மழை பெய்து அருளுமாறு சிவபெருமானிடம் மனமுருகி வேண்டினார். அவருடைய உறுதியான பக்தியின் காரணமாக சிவனருளால் அங்கே மழை திடீரென்று கொட்டியது. இப்படி திடீரென்று பெய்த மழையில் ஆற்றின கரையில் காய வைத்த நெல்மணிகள் சேதமாகிவிடுமே அதனால் இன்று இறைவனுக்கு உணவு தயாரிக்க இயலாது போகிவிடுமே என்று பயந்து கொண்டே அங்கே சென்றார். அங்கு ஓர் அதிசயத்தை கண்டார். அவர் காய வைத்திருந்த நெல்மணிகளை சுற்றியிருந்த இடத்தில் மழை பெய்த போதிலும் காய வைத்திருந்த நெல்மணிகள் மீது ஒரு துளி மழை நீர் கூட விழாமல்  இருந்த அதியசத்தை கண்டு இறைவன் அருளை எண்ணி மெய் மறந்து நின்றார். இவ்வாறு நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் அதிலிருந்து புராணப்படி இந்நகரமானது “திரு“ “நெல்“ ”வேலி” என அழைக்கப்படலாயிற்று.

புவியியல் அமைப்பு

உலக வரைபடத்தில் 08.8’ மற்றும் 09.23’ இடையேயுள்ள அட்சரேகையிலும் 77.09’ மற்றும் 77.54’ இடையேயுள்ள தீர்க்க ரேகையிலும் திருநெல்வேலி மாவட்டம் அமைந்துள்ள. இம் மாவட்த்தின் மொத்த பரப்பளவு 3,876.06 சதுர கி.மீ. ஆகும்.

எல்கைகள்

திருநெல்வேலி மாவட்டமானது தென்கிழக்கில் மன்னார்வளைகுடா, வடக்கே விருதுநகர், கிழக்கே தூத்துக்குடி, மேற்கே கேரளா மற்றும் தென்காசி, தெற்கே கன்னியாகுமரி மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *