பண்டைய தமிழ்நாட்டில், வேந்தர் என அழைக்கப்பட்ட அரசர்களின் தலைமையின் கீழ் இருந்த மூன்று முடியாட்சி மாநிலங்களும் வேள் அல்லது வேளிர் என்ற பட்டப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட பல பழங்குடி இனத் தலைவர்களின் தலைமையில் இருந்த பழங்குடி இனக் குழுக்களும் இருந்தன. இவர்களுக்கும் அடுத்ததாக, உள்ளூர் பகுதிகளின் இனக் குழுக்களின் தலைவர்கள் இருந்தனர், இவர்கள் கிழார் அல்லது மன்னர் என அழைக்கப்பட்டனர். கி.மு மூன்றாம் நூற்றாண்டின் போது தக்காணப் பீடபூமி மௌரியப் பேரரசின் ஒரு அங்கமாக இருந்தது. கி.மு முதல் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை இந்த பகுதி சாதவாகனர் வம்சத்தினரால் ஆளப்பட்டது. வடக்கு பகுதியைச் சேர்ந்த இந்தப் பேரரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழ் பகுதி தன்னிச்சையாக இருந்தது. தமிழ் அரசர்கள் மற்றும் குழுத்தலைவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர்கள் சண்டையிடுவது இடங்களுக்காகவே. அரசனின் நீதிமன்றங்கள் ஆற்றலைப் பகிர்ந்தளிப்பதற்கு பதிலாக சமூக நிகழ்வுகளுக்கான மையங்களாக இருந்தன. அவை வளங்களைப் பகிர்ந்தளிக்கும் மையங்களாக இருந்தன. ஆட்சியாளர்கள் படிப்படியாக வட இந்தியார்களின் ஆதிக்கம் மற்றும் வேதக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கினர். இவைகள் ஆட்சியாளரின் நிலையை மேம்படுத்த பலி கொடுக்கும் பழக்கத்தையும் ஊக்குவித்தன.
அசோகப் பேரரசின் கீழ் இல்லாத பேரரசுகள் மற்றும் இந்தப் பேரரசுடன் நட்பு நிலையில் இருந்த பேரரசுகள் பற்றிய தகவல்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்ந்து சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் சேரர்களின் வம்சங்கள் (கி.மு 273-232) அசோகத் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழ் பேரரசுகளின் கூட்டமைப்பைபற்றி கி.மு 150 ஆண்டைச் சேர்ந்த கலிங்கப் பேரரசை ஆட்சி செய்த அரசன் கார்வேலனின் ஹத்திகும்பா கல்வெட்டு, குறிப்பிடுக்கிறது.
முற்கால சோழர்களில் கரிகாலச் சோழன் மிகப் புகழ்பெற்றவராக இருந்தார். சங்க இலக்கியங்களின் பல்வேறு செய்யுள்களில் கரிகாலச் சோழன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னாளில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் நூலில் வரும் பல்வேறு கதைகளிலும் கரிகாலன் பற்றிய செய்திகள் முக்கிய பொருளாக இருந்தது. மேலும் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கிய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளிலும் கரிகாலன் பற்றிய தகவல்கள் உள்ளன. இமாலயம் வரையிலான இந்தியா முழுவதையும் வென்றவன் எனவும் நிலமானியங்களைக் கொண்டு காவேரி ஆற்றின் வெள்ளத்தை தடுப்பதற்காக கரைகளைக் கட்டியவன் எனவும் இந்த நூல்கள் விளக்குகின்றன. சங்க இலக்கியங்களில் இந்த தகவல்கள் இல்லை என்பதால் இந்த வரலாறு பற்றி வெளிப்படையாக தெரிவதில்லை. சோழர்களில் மற்றொரு புகழ்ழெற்ற மன்னன் கோச்செங்கண்ணன் ஆவான். சங்க கால இலக்கியப் பாடல்கள் பலவற்றில் அவனைப் பற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. இடைக்காலத்தின் போது சைவ அறிவாளராகவும் கருதப்பட்டார்.
இந்திய தீபகற்பத்தின் தென்கோடிப் பகுதியான கொற்கையிலிருந்து முதலில் ஆட்சி செய்ய தொடங்கிய பாண்டியர்கள் பின்னாளில் மதுரை நகருக்கு மாறினர். சங்க இலக்கியத்திலும் பாண்டியர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே காலத்தில் இருந்த கிரேக்க மற்றும் உரோமானிய ஆவணங்களிலும் பாண்டியர்கள் பற்றி உள்ளது. மெகஸ்தனிஸ், இந்திகா என்ற தனது நூலில் பாண்டியப் பேரரசு பற்றி குறிப்பிட்டுள்ளார். மதுரையின் தற்போதைய மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் தெற்கு கேரளாவின் சில பகுதிகளை பாண்டியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பாண்டியர்கள் கிரேக்கம் மற்றும் உரோம் ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பையும் கொண்டிருந்தனர். பாண்டியர்கள் தமிழகத்தின் மற்ற பேரரசுகளுடன் இணைந்து ஈழத்தின் தமிழ் வணிகர்களுடன் வணிக மற்றும் திருமணத் தொடர்பையும் கொண்டிருந்தனர். சங்க இலக்கியங்களின் பல்வேறு பாடல்களில் பாண்டிய மன்னர்கள் பலர் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்களில் ‘தலையாலங்கானம் வென்ற’ நெடுஞ்செழியன் மற்றும் தியாகச் செயல்களுக்கான சிறப்பான ஒருவராக குறிப்பிடப்படும் ஆரான் முதுகுடுமி பெருவழுதி என்ற மற்றொரு நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அகநானூறு மற்றும் புறநானூறு போன்ற தமிழ்நூல்களின் தொகுப்புகளில் உள்ள சிறிய பாடல்கள், மதுரைக் காஞ்சி மற்றும் நெடுநல்வாடை போன்ற இரண்டு முக்கிய நூல்களிலும் (பத்துப்பாட்டு தொகுப்புகளில் உள்ளது) சங்க காலத்தில் பாண்டிய பேரரசில் மேற்கொள்ளப்பட்ட சமூக மற்றும் வணிக ரீதியான செயல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டின் முடிவில் களப்பிரர்களின் ஊடுருவல் காரணமாக முற்காலப் பாண்டியர்களின் புகழ் மறைந்து போனது.
தென்னிந்தியாவின் மலபார் கடற்கரை அல்லது அதன் மேற்கு பகுதியுடன் இணைந்த, தற்போதைய கேரள மாநிலம் ஆகியவை ஒன்றிணைந்த பகுதியாக சேரர்களின் பேரரசு இருந்தது. கடல் வழியாக ஆப்பிரிக்காவுடன் வாணிகம் செய்வதற்கு ஏற்ற வகையில் அவர்களின் இருப்பிடம் இருந்தது. இந்தியாவின் மாநிலமான கேரளாவில் உள்ள இன்றைய மக்கள், பண்டையக் காலத்தில் தங்கள் பகுதியை ஆட்சி செய்த சேரர்கள் பேசிய மொழியே பேசுகின்றனர். மேலும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுடனும் இவர்கள் பரவலான தொடர்பு கொண்டிருந்தனர். இது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு வரை மட்டுமே வழக்கத்தில் இருந்தது, இதன் பிறகு தமிழ் மொழியில் வடமொழியின் தாக்கம் காரணமாக மொழியின் தனிப்பட்ட அங்கீகாரம் மாறி புதிய மொழி ஒன்று பயன்பாட்டிற்கு வந்தது.
பழமையான இலக்கியங்கள் தமிழில் வளர்வதற்கு இந்த முற்கால பேரரசுகள் ஆதரவளித்தன. சங்க இலக்கியம் என்று அறியப்படும் செவ்வியல் இலக்கியம் கி.மு 200 முதல் 300 ஆம் ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது. சங்க இலக்கியத்திலுள்ள பாடல்கள் பெரும்பாலும் உணர்வு மற்றும் பொருள் சார்ந்த தலைப்புகளையே கொண்டுள்ளன. இடைக்காலத்தில் இவைகள் வகைப்படுத்தப்பட்டு பல்வேறு தொகை நூல்களாக திரட்டப்பட்டுள்ளன. செழுமையான நிலம் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த மக்கள் குழுக்கள் பற்றியே இந்த சங்கப் பாடல்கள் சித்தரிக்கின்றன. இந்த பகுதிகளை ஆட்சி செய்வது பரம்பரை குடியாட்சி முறையில் இருந்தது. எனினும் இந்த பகுதிகளின் செயல்பாடுகள் மற்றும் ஆட்சி செய்பவரின் ஆற்றல் ஆகியவை முன்பே இயற்றப்பட்ட ஒழுங்குமுறைகளை (தர்மம் ) பின்பற்றியே இருந்தது. மக்கள் தங்களின் அரசரிடம் மிகவும் விசுவாசமாக இருந்தனர். உலகம் சுற்றும் புலவர்களும் இசைக்கலைஞர்களும் நடனக் கலைஞர்களும் தாராள மனமுடைய அரசனின் அவைகளை அலங்கரித்தனர். இசை மற்றும் நடனக் கலைகள் மேம்பட்டு புகழ்பெற்றிருந்தன. சங்ககாலப் பாடல்களில் பல்வேறு வகையான இசைக் கருவிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தன. தெற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதி நடனங்களை ஒருங்கிணைத்து புதிய வகை நடனம் ஆடுவது இந்த காலத்தில் தான் தொடங்கியது. இந்த வகை நடனங்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தில் முழுமையாக வெளிப்பட்டு இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகம் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு இயக்கத்தில் இருந்தது. தொல்லியல் துறை ஆய்வுகள் மற்றும் இலக்கியங்களில் யுவனர்களுடனான வெளிநாட்டு வணிகம் செழுமையாக இருந்தததைக் கூறுகின்றன. தென்னிந்தாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்த முசிறி மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியின் துறைமுக நகரம் பூம்புகார் ஆகிய இரு இடங்களில் ஏராளமான கப்பல்கள் நிறுத்தப்பட்டு வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வணிக மையங்களாக விளங்கின. இந்த வணிகம் இரண்டாம் நூற்றாண்டிற்கு பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது. மேலும் உரோமானிய அரசுக்கும் பண்டைய தமிழ் நாட்டிற்கும் இருந்த நேரடி உறவு அரபியர்கள் மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவை சேர்ந்த ஆக்சுமைட்களின் நேரடி வணிகத்தால் சிதைவுறத் தொடங்கியது. உள்நாட்டு வணிகம் சிறப்பாக இருந்தது, பொருள்கள் வாங்குவது மற்றும் விற்பது பண்டகமாற்று முறைப்படி நடந்தது. பெரும்பாலான மக்களுக்கும் அதிக நிலங்களைக் கொண்டிருந்த பரம்பரை விவசாயிகளான வெள்ளாளர்களுக்கும் விவசாயம் தலைமைத் தொழிலாக இருந்தது.
Source- Wikipedia