Spread the love

ஔவையார் காலத்தில் பெரும் பஞ்சம் நிலவியது .அப்போது கடையேழு வள்ளல்களில் ஒருவரான (பாரி , ஓரி , நள்ளி , ஆய் , காரி ,பேகன் , அதியமான் {அதியன்}) காரியை காரி ஆசான் என்றும் திருமுடிக்காரி என்றும்  அழைத்தனர்  அக்காலத்தவர் . காரி அதியமானின் அரசில் ஒரு சிற்றரசனாக இருந்து வந்தார். அப்பஞ்சத்தில்   துயருற்ற எழை , எளியவர்களுக்கு ,  தனது வரிப்பணத்தில்அதியமானுக்கு செலுத்த வேண்டிய நெல்லை  வாரி வழங்கினார் .

அப்போது அங்கு வந்த அதியமானின் வரி வசூல் செய்யும் அதிகாரிகள் காரியை கைது செய்து கொண்டு போய் சிறையில் அடைத்தனர் . அது கண்ட வெகுண்ட பொது மக்கள் அதிமானின் கோட்டை மதில் சுவரை  இடித்து காரியை விடுதலை செய்ய முயற்சி செய்தனர் .அப்போது அங்கு வந்த ஔவையார் , காரியை நாம் விடுதலை செய்து கொண்டு வருவோம் என உறுதி மொழி அளித்து சென்று அதியமானிடம் பேசுகிறார்.

அப்போது ஔவையார் “மக்கள் நன்றாக வாழ்ந்தால்தானே அரசும் வாழும் , வரப்புயர நீர் உயரும் , நீர் உயர நெல் உயரும் , நெல் உயரக் குடி உயரும் , குடி உயரக் கோன் உயர்வான் என்பதை மறந்தாயா? குடிகள் நன்றாக இருக்கும் வரைதான் அரசு  நன்றாக இருக்கும் .அக்குடிமக்கள் நன்றாக இருக்க நீ செய்யத் தவறியதைத்தான் காரி ஆசான் செய்தான் .நீ அவனைக் கைது செய்யலாமா ?” என்று கேட்கிறார்.

அது கேட்ட அதியமான் “உங்கள் அறிவுரைகள் எமது அகக்கண்களை திறந்தது .இப்போதே காரி ஆசானை விடுதலை செய்யச் சொல்லுகிறேன் ” என்றான் .

அப்போது ஔவையார் இவ்வளவு நல்ல உள்ளங்கள் இருந்த போதும் , உத்தமர்கள் இருந்த  போதும்  மழை ஏன் பொழிய மறுக்கிறது என்று இயற்கையைப் பார்த்து ஒரு பாடல் பாடுகின்றார் .

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லோர்க்கும்  பெய்யும் மழை .

நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியோடி ஆங்காங்கிருக்கும்  புல்லுக்கும் ஆகுமாம் . அதுபோல  நல்லவர் ஒருவர் உலகில் இருந்தால் அவரைக் காக்கும் பொருட்டாக உலகிற்கே மழை பொழியும்.

இப்படி அவர் பாடியவுடனே மழை கொட்டித் தீர்த்தது.அவரது தமிழுக்கு அவ்வளவு வன்மை இருந்தது.பஞ்ச பூதங்களை ஆளும் வல்லமை தமிழுக்கு உண்டு .அதைப் பாடும் புலவர்களுக்கும் உண்டு.அக்காலத்தில் அறம் பாடியே அநீதியை அழித்தவர்கள் , இயற்கையையும் சரி செய்தவர்கள் தமிழ்ப் புலவர்கள் .

ஓதி உணர்ந்த பயன் உலகினுக்கே தரும்

நீதி முறை வழுவா  வேதியராலே எல்லோர்க்கும்  பெய்யும் மழை

தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லோர்க்கும்  பெய்யும் மழை .

நான் மறைகளை ஓதி உணர்ந்த பயன் , அவற்றை உலகினுக்கு ஆக்கும் பயனால் தான் படித்த படிப்புக்கு பயன் . இப்படி செயலாற்றும்  நீதி முறை வழுவா  வேதியராலேதான் எல்லோருக்கும் மழை பொழியும் .

கண்ணும் கருத்தும் என , கண்ணும் கருத்தும் என

கணவனைக் கருதும் புண்ணிய மாதர்தம்  புகழ் கற்பினாலே

புகழ் கற்பினாலே புகழ் கற்பினாலே

எல்லோர்க்கும்  பெய்யும் மழை.

கண்ணும் கருத்தும் என கணவனைக் கருதும் கற்புடை மாதர்கள் கற்புத் திறத்தாலேதான்  எல்லோருக்கும் மழை பொழிகிறது  .

எண்ண அரிய தொழில் செய்து  அரிய தொழில் செய்து

இம்மாநிலம் உண்ண உணவு தரும் உழவர்களாலே

உழவர்களாலே உண்ண உணவு தரும் உழவர்களாலே

எல்லோர்க்கும்  பெய்யும் மழை.

இவ்வுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லோர்க்கும்  பெய்யும் மழை .

எண்ணுதற்கு  அரிய தொழில் செய்து , உலகைக் காக்கும் இம்மாநிலம் உண்ண உணவு தரும் உழவர்களாலே எல்லோர்க்கும்  பெய்யும் மழை.(இப்போதுள்ள உழவர்கள் பூச்சி மருந்துகளைப் போட்டு ,உரத்தையும் போட்டு மக்களைக் கொல்லும் தொழில் செய்வதாலேதான் மழையும் பொய்க்கிறது . இப்போதுள்ள உழவர்கள் எம்மை மன்னிக்கவும் . நீங்களும் உயிர்களைக் கொல்லும் பூச்சி மருந்துகள் ,மற்றும் உரத்தையும் போடும் விவசாயத்தை விட்டுவிட்டு நல்ல இயற்கை விவசாத்துக்கு மாறுங்கள் . இயற்கை மழையைக்  கொட்டோ கொட்டென்று கொட்டும் ) .

By Manager

One thought on “வள்ளல் காரியாசானை கைது செய்த அதியமான். விடுவிக்க வைத்த ஔவையார்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *