மாவீரன் அழகுமுத்துக்கோன் (Maveeran Alagumuthu Kone, 1710–1759) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்.
தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் (அழகுமுத்து இவர்களின் குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார்.