Spread the love

வாசி தீரவே பதிகத்தை திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை என்னும் தலத்தில் பாடி இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, அப்பொற்காசுகளை விற்று பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு உணவளித்தார்.

இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை.

இதனைப் பாடினால் தேடிய செல்வம் நிலைத்திருக்கும்; தேவையில்லாமல் கரையாது.

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேமம் நல்குமே.

பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.

அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.

காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

– திருஞானசம்பந்தர்

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே.

பொழிப்புரை :

குற்றம் அற்ற வீழிமிழலையில் எழுந்தருளியுள்ள இறைவரே, அடியேனுக்கு வழங்கியருளும் காசில் உள்ள உயர்வு தாழ்வு நீங்குமாறு செய்து அக்காசினை நல்குக. அதனால் உமக்குப் பழிப்பு இல்லை.

குறிப்புரை :

வாசி – உயர்வு தாழ்வு. (வட்டமாகக் கழிக்கும் பணம்.) மாசு – குற்றம். ஏசல் – நிந்தனை.
பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.

பொழிப்புரை :

எல்லோருக்கும் இறைவராக விளங்கும் பெரு மானீரே, வேதங்களின் ஒலி நிறைந்த திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, கறை படிந்ததாக அளிக்கப்படும் காசில் உள்ள அக்கறையை நீக்கி முறையாக அளித்தருளுக.

குறிப்புரை :

இறைவர் ஆயினீர் என இயற்கையே இறைவரை, ஆயினீர் என ஆக்கம்கொடுத்துக் கூறினார், முறைப்படி வேற்றுமையறக் கொடுக்காமையால். கறைகொள் காசு – அழுக்குப் படிந்த காசு; நாள்படச் சேமித்துவைத்த காசு என்பது கருத்து.
பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர் உய்ய நல்குமே.

பொழிப்புரை :

சிவந்த திருமேனியை உடையவரே, மெய்ம்மை யாளர் வாழும் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, படம் எடுக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டுள்ளவரே, அடியேங்கள் உய்யுமாறு வாசியில்லாததாகக் காசு அருளுக.

குறிப்புரை :

மெய் – உண்மைத்தன்மை. பை – படம்.
பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறு மருளுமே.

பொழிப்புரை :

திருவெண்ணீற்றை அணிந்தவரே, ஆனேற்றில் ஏறி வருபவரே, பலராலும் புகழப்பெறும் திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, காசு அருளுவதோடு எமக்கு முத்திப்பேறும் அருளுவீராக.

குறிப்புரை :

பேறும் அருளும் – காசுகொடுத்ததோடமையோம்; வீடுபேற்றையும் கொடும் என்பதாம்.
பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.

பொழிப்புரை :

காமனை எரிந்து அழியுமாறு செய்தபுகை பொருந்திய அழல் விழியை உடையவரே! புகழ் பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே! எமக்குச் சேமத்தை அருளுவீராக.

குறிப்புரை :

தூமக்கண் – புகையோடுகூடிய தீக்கண். நாமம் – புகழ். சேமம் – பாதுகாவல். கே?ஷமம் என்பதன் திரிபுமாம்.
பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே.

பொழிப்புரை :

கட்டப்பட்ட சடையை உடையவரே, நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே, அழகு பொருந்திய திருவீழி மிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எம்மைப் பணி கொண்டு அருளுவீராக.

குறிப்புரை :

பிணிகொள்சடையினீர் – கட்டிய சடையையுடைய வரே. மணி – நீலமணி. பணி – ஏவல்.
பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, உயர்வுடைய திருவீழிமிழலையில் உறைபவரே, கங்கை சூடிய திருமுடியை உடையவரே, எங்களது ஐயுறவைப் போக்கியருளுக.

குறிப்புரை :

பங்கு – ஒருபகுதி. துங்கம் – உயர்வு. சங்கை – சந்தேகம். தேவரீரிடம் வேற்றுமை சிறிதும் இல்லையாகவும் நாங்கள் சந்தேகிக்கிறோம்; வாசிதீர அளித்து அதனைப்போக்கியருளும்.
பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

அரக்க னெரிதர இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே.

பொழிப்புரை :

இராவணன் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரிய இரக்கம் காட்டியருளியவரே, எங்கும் பரவிய புகழ் உடைய திருவீழிமிழலையில் உறைபவரே, எமக்கு அளிக்கும் காசில் உள்ள குறையைப் போக்கியருளுக.

குறிப்புரை :

அரக்கன் – இராவணன். பரக்கும் – எங்கும் புகழ் பரவிய. கரக்கை – வஞ்சகம்.
பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனு மருளுமே.

பொழிப்புரை :

நான்முகனும் திருமாலும் அடிமுடி காண முயலும் பேருருவம் கொண்டருளியவரே, எல்லோரும் எளிதில் வழிபட இயலுமாறு திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, எமக்கு வீட்டின் பத்தையும் அருளுவீராக.

குறிப்புரை :

பயன் – வீட்டின்பம்.
பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.

பொழிப்புரை :

ஒன்றொன்றாக மயிர் பறித்த தலையினை உடைய சமணர்கள் அறிய வேண்டுபவராகிய உம்மை அறியாது வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில் உறைபவரே, அடியேங்கள் உம்மைப் பிரிந்து வாழ்தல் இயலாது.

குறிப்புரை :

பறிகொள்தலையினார் – மயிர்பறித்த தலையை யுடைய சமணர். அறிவது அறியவேண்டிய உண்மை ஞானங்களை. வெறி – மணம்.
பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே.

பொழிப்புரை :

இத்திருப்பதிகம் சீகாழிப்பதியாகிய பெரிய நகருள் தோன்றி வாழும் ஞானசம்பந்தன் திருவீழிமிழலை இறைவர் மேல் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகளைக் கொண்டதாகும்.

குறிப்புரை :

வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே வல்லார் எல்லா நன்மையும் எய்துவர் எனச் செயப்படுபொருளும், வினையும் வருவித்து முடிக்க.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *