Spread the love

ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்

செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே யாயிழை கணவ
காலை யந்தியு மாலை யந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக்

குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொ
டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக்
கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்
ககலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன்

எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின்
பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற்
படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்


இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக்
கொண்டன் மாமழை பொழிந்த
நுண்பஃ றுளியினும் வாழிய பலவே.

உரை: ஆன் முலை அறுத்த அற னிலோர்க்கும் – ஆனினது
முலையாற் பெறும் பயனைக் கெடுத்த தீவினையாளர்க்கும்; மாண்
இழை   மகளிர்   கரு   சிதைத்தோர்க்கும் –  மாட்சிமைப்பட்ட
ஆபரணத்தையுடைய பெண்டிரது கருப்பத்தை அழித்தோர்க்கும்;
குரவர் தப்பிய கொடுமையோர்க்கும் – தந்தை தாயாரைப் பிழைத்த
கொடுந் தொழிலை யுடையோர்க்கும்; வழுவாய் மருங்கின் கழுவாயும்
உள என – அவர் செய்த பாதகத்தினை யாராயுமிடத்து அவற்றைப்
போக்கும் வழியும் உள வெனவும்; நிலம் புடை பெயர்வ தாயினும் –
நிலம் கீழ் மேலாம் காலமாயினும்; ஒருவன் செய்தி கொன்றோர்க்கு
உய்தி இல்லென – ஒருவன் செய்த நன்றியைச்  சிதைத்தோர்க்கு
நரகம் நீங்குதலில்லை யெனவும்; அறம் பாடிற்று – அற நூல் கூறிற்று;
ஆயிழை கணவ – தெரிந்த ஆபரணத்தை யுடையாள் தலைவ;காலை
யந்தியும்  மாலை  யந்தியும் – காலையாகிய  அந்திப்  பொழுதும்
மாலையாகிய அந்திப் பொழுதும்; புறவுக் கருவன்ன புன்புல வரகின்
– புறவினது கருவாகிய முட்டை போன்ற புல்லிய நிலத்து வரகினது
அரிசியை; பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கி – பாலின்கட் பெய்து
அடப்பட்ட சோற்றைத் தேனொடு கலந்துண்டு; குறு முயற்கொழுஞ்
சூடு   கிழித்த   ஒக்கலொடு   –  குறிய  முயலினது  கொழுவிய
சூட்டிறைச்சியைத் தின்ற என்  சுற்றத்தோடு  கூட;  இரத்தி  நீடிய
அகன்றலை   மன்றத்து  –  இலந்தை   மரமோங்கிய   அகன்ற
இடத்தையுடைய பொதியிற்கண்; கரப்பில் உள்ளமொடு-ஒன்றனையும்
மறைத்தலில்லாத உள்ளத்துடனே; வேண்டுமொழி பயிற்றி – வேண்டி
வார்த்தைகளைப் பலகாலும் கூறி; அமலைக்கொழுஞ் சோறு ஆர்ந்த
பாணர்க்கு – பெரிய கட்டியாகிய கொழுவிய  சோற்றை  யருந்திய
பாணர்க்கு; அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்  –  நீங்காத
செல்வ மெல்லாவற்றையும் செய்தோன்; எங்கோன் வளவன் வாழ்க
என்று – எம்முடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாக வென்று
சொல்லி; நின் பீடு  கெழுநோன்றாள்  பாடேனாயின் –  நினது
பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடிற்றிலே னாயின்; பல்
கதிர்ச் செல்வம் படுபறியலனே – வாழ்நாட் கலகாகிய பல
கதிரையுடைய   செல்வன் தோன்றுத லறியான்; யானோ

இப்பாடலின் ஆசிரியர் ஆலத்தூர் கிழார் சோழநாட்டில் உள்ள ஆலத்தூர் என்ற ஊரைச் சார்ந்தவர் என்பதுடன், வேளாண் மரபினராகவும் இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

இப்பாட்டில் இவர், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனிடம் பெருஞ்செல்வம் பரிசில் பெற்றுச் செல்லும் தன்னை, அவன் ‘எம்மை நினைத்து மறுபடியும் வருவீரோ?’ என்று கேட்க, ‘அழகிய ஆபரணங்களையணிந்த பெண்ணின் கணவனே! பசுவின் பால் தரும் முலையை அறுத்து, முலையாற் பெறும் பயனைக் கெடுத்த தீவினை யாளர்க்கும் சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்களின் கர்ப்பத்தை அழித்தோர்க்கும் பார்ப்பனர்கள் வருந்த கொடுமை செய்தோர்க்கும் அவரவர் செய்த பாதகத்தினை ஆராய்ந்து அவற்றைப் போக்கும் பிராயச்சித்தமும் உண்டு என்றும், நிலநடுக்கத்தால் நிலமே மேடு பள்ளமாக, பள்ளம் மேடாக பெயர்வதானாலும் ஒருவன் செய்த உதவியை மறந்து கொன்றோர்க்கு அவற்றின் விளைவுகளிலிருந்து பிழைக்கும் வழி இல்லை என்றும் அறநூல்கள் கூறுகின்றன.

புன்செய் நிலத்தில் விளைந்த புறாவின் கருவாகிய முட்டை போன்ற வரகினது அரிசியை பால் விட்டு சமைத்த சோற்றில் தேனும் கலந்து இளமுயலின் கொழுத்த சுடப்பட்ட இறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு இலந்தை மரங்கள் நிறைந்த அகன்ற பொது வெளியிடத்தில் கள்ளமில்லா உள்ளத்துடன் வேண்டிய இன்சொற்களைப் பலவாறாகப் பேசியபடி பெரிய கட்டியாக வழங்கிய சுவைமிகுந்த சோற்றைப் பாணர்கள் உண்பார்கள்.

அவர்களுக்கு நீங்காத செல்வம் எல்லாம் முழுமையாகக் கொடுத்தவன் எங்களுடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாக என்று சொல்லி அதிகாலையிலும் மாலை வேளையிலும் உனது பெருமை பொருந்திய வலிய திருவடிகளைப் பாடவில்லை என்றால் பல கதிர்களையுடைய செல்வனாகிய கதிரவன் தோன்றமாட்டான்.

பெருமானே, நானோர் எளியவன்! இவ்வுலகில் நற்குணங்கள் அமைந்த சான்றோர்கள் செய்த நல்ல செயல்கள் உண்டாயின் இமயமலையில் திரண்டு இனிய ஓசையுடன் கீழ்க்காற்றால் வரும் பெருத்த மழை சொரிந்த நுண்ணிய பல துளிகளை விட பல காலம் நீ வாழ்வாயாக! என்று ஆலத்தூர்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வாழ்த்துகின்றார்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *