Spread the love

நவகண்டம், அரிகண்டம் என்றால் என்ன?

நவகண்டம், அரிகண்டம் இரண்டும் தமிழகத்தில் பழங்காலத்தில் நிலவிய, ஒருவர் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளும் முறைகள்.

நவகண்டம் என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ கொற்றவை எனும் பெண் தெய்வத்தை நோக்கி அறுத்து தன்னையே பலி கொடுத்துக் கொள்வது. அரிகண்டம் என்பது வாளால் தலையை மட்டும் துண்டித்து தன்னை தானே பலி கொடுத்து கொள்வது.

உடலின் ஒன்பது பாகங்களை தானே அரிந்து கொற்றவைக்கு பலியிடுவது தான் நவகண்டம். இம் மரபு தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. கொற்றவையின் முன்பாக தன் வேண்டுதலை நிறைவேற்ற தலையை அறுத்துப் பலியிட்டு கொண்டவர்களைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன, குறிப்பாக கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்து பலிகொண்ட வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது.

தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து பலியிடுவதற்கு அரிகண்டம் என்று பெயர். இது ஒரு விழா போல் நடத்தப்படும். நவகண்டம் ‍/அரிகண்டம் கொடுப்பதற்கு முன்பு உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் ‍கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலம் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு, தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பார்.

இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்க்கு பல காரணங்கள் உண்டு:

1. வலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்க்கு வாய்ப்பே இல்லை என்ற‌ தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. துர்க்கைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப்பட்டது.

2. சில சமயங்களில் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடக்கும் அரசனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப்பட்டது.

3. நோயினால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

4. குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவ‌து.

5. ஒருவன் போர்க்காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தருவாயில் அவனுக்கு முடிக்க வேண்டிய கடமைகள் ஏதும் இருக்குமாயின் தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவது. அப்படி நடக்கும் பட்சத்தில் அந்தக் கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வது. போன்ற பல காரணங்கள் உண்டு

அரிகண்டம்

இப்பொழுது முக்கியமானவர்களுக்கு பூனைப்படை பாதுகாப்பு மாதிரி முன்பு சோழர்களுக்கு “வேளக்கார படைகள்” மற்றும் பாண்டியர்களுக்கு “தென்னவன் ஆபத்துதவிகள்” என்ற இருவிதமான படைகள் இருந்தன. தங்கள் கவனக்குறைவினாலோ, தங்களை மீறியோ, அரசர் உயிருக்கு அபாயம் நேர்ந்து விட்டால், துர்க்கையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாவதாகச் சபதம் எடுத்துக் கொண்டவர்கள்.

“தூங்குத்தலை” எனும் வீரச்சாவு

கொற்றவையை நினைத்து வீரன் அமர்ந்திருக்க, அருகேயுள்ள மூங்கிலை வளைத்து, அதில் அவன்முடி கட்டப்பட்டிருக்கும். அவனுக்கருகேயுள்ள மற்றொருவீரனோ அல்லது அவ்வீரனோ தலையை துண்டிப்பான். உடம்பிலிருந்த தலை அவனுடம்பிலிருந்து தனியாக மேலே நிமிரும். மணிமேகலை, கலிங்கத்துப்பரணி இந்நிகழ்ச்சியினை ஆவணப்படுத்தியுள்ளன.

“உலையா உள்ளமொடு உயிர்க்கடனிறுத்தோர் தலைதூங்கு நெடுமரம்”

“வீங்குதலை நெடுங்கழையின் விசைதொறும்

திசைதொறும் விழித்துநின்று தூங்குதலை”

என இந்நிகழ்வினை இலக்கியங்கள் காட்சிபடுத்துகின்றது.

யமகண்டம் என்றால் என்ன?

யமகண்டம் என்பது உறியை மேலே கட்டி, கீழே தீ மூட்டி, எட்டுக் கத்திகளை ஒருவரின் மீது பாய்ச்சுவதற்கு யானைகள் துணையுடன் அமைக்கப்படும் அமைப்பாகும். இந்த அமைப்பை தலைக்கு மேல் கத்தி, உடலுக்கு கீழ் நெருப்பு என சுட்டுகின்றனர். இந்த யமகண்ட முறையில் பல்வேறு சமயங்களில் பாடகர்கள் தங்களுக்குள் போட்டியை வைத்துக் கொண்டு பாடியுள்ளார்கள். இந்த யமகண்டத்தில் பாடிய புலவர்களில் காளமேகப் புலவர் குறிப்பிடத்தக்கவர். அபிராமி அந்தாதியை பாடிய அபிராமி பட்டரும் இந்த யமகண்டத்தில் நின்று பாடியுள்ளார்.

16 அடி நீள அகல உயரத்திற்கு சதுரமான பெரிய குழியை வெட்டி, அதன் நான்கு மூலைகளிலும் 16 அடி உயர இரும்பு கம்பங்களை நட்டு… கம்பத்தின் மீது நான்கு சட்டமும், அதன் நடுவே ஒரு சட்டமும் அமைக்கவேண்டும். நடுசட்டத்தின் மீகு உறிகட்டி, குழியினுள் பழுத்த புளியக்கொம்புகளை அடுக்கி, அதற்கு நெருப்பினை இடவேண்டும். புளியம்கொம்புகள் எரிந்து கனன்று கொண்டிருக்கும் போது… அந்த நெருப்பில் இரும்புக் கொப்பறையும், அந்த இரும்புக் கொப்பறைக்குள் எண்ணெயை நிரம்ப விட்டு, அந்த எண்ணைக்குள் அரக்கு, மெழுகு, குங்குலியம், கந்தகம், சாம்பிராணிகளை நிரப்பி உருகும் அளவிற்குக் கொதிக்க வைக்க வேண்டும். காளமேகப் புலவர் தன்னுடைய பாடல் தொகுப்பொன்றை யமகண்ட முறையில் பாடியுள்ளார். அந்தத் தொகுப்பிற்கு யமகண்டம் என்றே பெயரிட்டுள்ளார்.

கம்பத்திற்கு ஒரு யானை என நான்கு யானைகளை நிறுத்த வேண்டும். கூரிய எட்டுக் கத்திகளை நடுசட்டத்தின் மேல் இருக்கும் மனிதரின் கழுத்திலும், இடுப்பிலும் கோத்துக்கட்ட வேண்டும். அப்படி கட்டப்பட்ட கத்திகளின் இணைப்பை யானைகளின் துதிக்கையில் கொடுத்து வைக்க வேண்டும். அதன்பின்பு நடுசட்டத்தில் உள்ள மனிதர் சுற்றியுள்ளவர் பாடும்படி கூறும் பொருளிளெல்லாம் பாட வேண்டும். இவ்வாறு பாடுவதில் தவறு நிகழ்ந்தால்,. யானைகள் பாகன்களால் கட்டுப்படுத்தப்பட்டு அந்த இரும்பு இணைப்புகளை இழுத்து பாடிக் கொண்டிருக்கும் மனிதரைக் கொல்லும்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *