Spread the love

வெறி என்னும் சொல்லுக்கு மணம் மற்றும் இறைவன் என்று பொருள் உண்டு. வெறியாட்டம் என்பது இங்கு சாமிஆட்டத்தைக் குறிக்கின்றது. சங்க காலத்தில் முருகக் கடவுளை வழிபடுவதற்காக நிகழ்த்தப்பட்ட ஆட்டக்கலை வேலன் வெறியாட்டு எனப்பட்டது. முருகனாகிய தெய்வம் வேலன் என்னும் பூசாரி மீது அருளேறிவந்து ஆடப்படும் ஆட்டம் ‘வேலன் வெறியாட்டம்’ என்பர்.

சங்க காலத்தில் வேட்டை இன மக்கள் இறை வழிபாட்டிற்கு உகந்த முறையாக ஆடற்கலையினைக் கொண்டிருந்தார்கள். வேலன் இனத்தை சேர்ந்த பூசாரி மீது குறிப்பிட்ட தெய்வத்தின் அருள் மேலேறி நடனமாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவார்கள்.

தமிழகத்தின் தொன்றுதொட்டு ஆடி வரும் வேலன் வெறியோடு, சொக்கக்கூத்து போன்றவைகளும், கேரளாவில் ‘தெய்யம்’ என்னும் ஆட்டமும், தென் கருநாடகத்தில் கோலா எனப்படும் பேய் நடனமும், ஆந்திராவில் அரங்கம் – எக்கேடம் என்னும் நடனமும் ஒரே மாதிரி ஆனவை ஆகும். குறிப்பாக கேரளாவின் வடக்கு மலபார் மலைப்பகுதிகளில் வேலன் என்னும் சாதிப் பெயரில் மக்கள் வசிக்கின்றனர். தெய்யம் என்னும் சாமியாட்டம் எந்த இன பூசாரிகளால் இன்றும ஆடப்பட்டு வருகிறது.

மேலும் சிற்றூர்களில் அமைந்துள்ள மாரியம்மன், ஐயனார், முனியப்பன், திரௌபதி அம்மன், காளி, அங்காளம்மன், சுடலை மாடன், இசக்கி அம்மன் போன்ற பல ஆண் மற்றும் பெண் தெய்வ வழிபாட்டில் தெய்வங்கள் பக்தர்கள் மேல் நின்று ஏறி சாமிஆடுவதைத் தான் வெறியாட்டு என்று சொல்லுவர். வெறியாடல் தமிழகம் எங்கும் நிறைந்து கொண்டு ஆடப்பட்டு வருகின்றது.

வெறியாட்டு அகத்திணை, புறத்திணை என இருதிணைகளுக்குப் பொதுவானது என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. ‘வெறியாட்டு’ பற்றிய செய்திகள் புறத்திணை பாடல்களைக் காட்டிலும், அகத்திணைப் பாடல்களில் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. ஆகவே வெறியாட்டைப் பற்றித் தொல்காப்பியத்தில் புறத்திணையியலில் மிகத் தெளிவான முறையில் விளக்கியுள்ளார் தொல்காப்பியர்.

“வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

வெறியாட்டயர்ந்த காந்தளும்”

என்ற நூற்பா அடிகளால் வேலன் வெறியாடலைச் சிறப்பாகக் கருதப்பட்டமையும் வேலன் வெறியாடுதலே பெரும்பான்மையாக இருந்து வந்துள்ளமையும் பெறப்படுகின்றன. தெய்வத்திற்குச் செய்யும் கடன்களை அறியும் சிறப்பினையும் உயிர்க்கொலை கூறலின் செவ்வாயினையும் உடையவன் ஆகிய வேலன் தெய்வமேறி ஆடுதலைச் செய்த காந்தளும் எனத் தொல்காப்பிய நூற்பாவில் நச்சினார்க்கினியர் எளிமையாக விளக்கியுள்ளார்.

வேலன், கணிகாரிகை, தேவராட்டி, குறத்தி என்னும் நான்கு பேரில் வேலன் வெறியாடுதல் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. திருமுருகாற்றுப்படையில் குறமகள் வெறியாடியதாகக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே பெண்கள் வெறியாடுதல் சிறுபான்மையே ஆகும்.

குறத்தி போன்ற பெண்கள் வெறியாடுதல் புறத்திணையில் இடம்பெற்றுள்ளன. ‘அமரகத்துத் தன்னை மறந்தாடி ஆங்குத்’ தமரகத்துத் தன் மறந்தாடும் குமரன் முன், என்னும் பாடல் அடிகளில் காரிகையர் வெறியாடிக் கொண்டு பாடப்பட்டவையாகும். வேலன் ஆடுதல் என்பது அகத்திணைக்கு உரியது என்பர். “நம் உறு துயரம் நோக்கி அன்னை வேலன் தந்தார்” என்ற அகத்திணைப் பாடலில் வேலன் வெறியாட்டத்தைக் குறிப்பிடுகின்றது.

ஆகவே, வெறியாடலின் முதன்மையான கூறாகிய அடவுகள் வரையறுக்கப்பட்டதாக அமையாது. மிகுபலம் பொருந்திய உடல் அசைவுகளைக் கொண்டதாக வெறியாட்டம் விளங்குகின்றது. ஆகவே, நன்கு வளர்ந்துள்ள பல ஆட்டக் கலைகள் வெறியாட்டங்களின் கொடையே என்றும் கூறலாம்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *