விநாயகருக்கு லம்போதரன் என மற்றொரு பெயரும் உண்டு. அப்படி என்றால் மிகப்பெரிய தொந்தி உடையவன் என அர்த்தமாகும்.
நமது பார்வையில் குபேரனும் சிவபெருமானும் முழுமையான முரண்பாட்டில் உள்ளனர். சிவபெருமான் தன் உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொண்டும், கழுத்தில் பாம்பை சூடிக்கொண்டும் மிக எளிமையாக காட்சி தருகிறார். ஆனால் அருமையான பட்டாடைகளை உடுத்திக் கொண்டும், ஜொலிக்கும் தங்க ஆபரணங்களை அணிந்தும் குபேரன் உள்ளார். அனைத்தில் இருந்தும் விலகி இருந்து, துறவிகள் மற்றும் முனிவர்களுக்கு மத்தியில் சிவபெருமான் விளங்கினார் என்றால், ஆடம்பரம் நிறைந்த மிகப்பெரிய அரண்மனையில் குபேரன் வசித்து வந்தார்.
ஒருமுறை சிவபெருமானை சிறுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கைலாசத்திற்கு சென்ற குபேரன், தன்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு சிவபெருமானை அழைத்தார். குபேரனின் கர்வம் மற்றும் தற்பெருமையை உணர்ந்த சிவபெருமான் அவருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.
தன்னால் விருந்தில் கலந்து கொள்ள முடியாது என்றும், தன் சார்பில் தன் மகனான பாலகன் விநாயகர் கலந்து கொள்வார் என சிவபெருமான் கூறினார். “என் மகனுக்கு அகோர பசி எடுக்கும். அவன் எப்போதுமே பசியுடன் தான் இருப்பான். அவன் பசியை உன்னால் ஈடுகட்ட முடியுமா? உனக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், இந்த அழைப்பை நீ பின்வாங்கிக் கொள்ளலாம்” என கூறினார் சிவபெருமான்.
அவமரியாதை அடைந்த குபேரன், அந்த யானை முகத்தை கொண்டிருந்த சிறுவன் விநாயகரை பார்த்தார். தான் ஏற்பாடு செய்திருந்த விருந்தை உண்ணுவதற்கு கூட இந்த குழந்தையால் முடியாதே என வியந்தான். அவரால் விநாயகரின் பசியை தீர்க்க முடியாது என்ற சிவபெருமானின் எண்ணம் தன் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டது என்று எண்ணி கோபம் கொண்டார். தன் திறனின் மீது இப்படி ஒரு சந்தேகம் வந்த பின் அவரால் பின்வாங்க முடியவில்லை. விநாயகருக்கு விருந்தளிக்க அவர் சம்மதித்தார்.
விருந்து தினத்தின் அன்று, யாருடைய துணையும் இல்லாமல், சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார் சிறுவன் விநாயகர். அந்த பிரம்மாண்ட அரண்மனையில் இந்த சிறுவன் எளிய உடையில் பொருந்தாமல் காட்சி அளித்தான். விநாயகரை வரவேற்ற குபேரன், உணவருந்த செல்வதற்கு முன் தன்னுடைய அழகிய அரண்மனையின் பெருமைகளை விளக்கினார். உணவருந்தும் அறையில் அந்த சிறுவனுக்காக தயாரிக்கப்பட்டிருந்த உணவுகளின் எடை தாங்காமல் மேஜைகள் ஓலமிட்டு கொண்டிருந்தன.
விநாயகருக்கு ஒரு பதார்த்தம் மாறி மற்றொன்று படைக்கப்பட்டு கொண்டே இருந்தது. விரைவில் அந்த மேஜை காலியானது. ஆனாலும் விநாயகர் திருப்தி அடையவில்லை. “எனக்கு இன்னும் பசிக்கிறது” என்றார். மிரண்டு போன குபேரன், இன்னும் உணவுகளை கொண்டு வருமாறு தன் பணியாட்களுக்கு கட்டளையிட்டார். சில நொடிகளில் அவைகளையும் விநாயகர் சாப்பிட்டு முடித்தார். ஆனாலும் அவருக்கு பசி அடங்கவில்லை.
சமையல் ஆட்களுக்கு அதிகமாக சமைத்து சமைத்து கிறுக்கு பிடித்ததை போல் ஆகி விட்டது. விநாயகரும் விடாமல் ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தார். சீக்கிரமே சமையலறையே காலியாகி விட்டது. சமையல் ஆட்களும் சோர்ந்து போனார்கள். “உங்களால் இவ்வளவு தான் எனக்கு விருந்தளிக்க முடிந்ததா? நீர் கொடுத்ததை விட என் தாய் எனக்கு அதிக உணவை அளிப்பார். இதை போய் நீர் விருந்து என கூறி விட்டீர்” என குபேரனை பார்த்து விநாயகர் கேட்டார். ராஜ்யத்தில் இருந்து மேலும் மேலும் உணவுகளை குபேரன் கொண்டு வந்தாலும் அவை அனைத்தையும் அசராமல் சாப்பிட்டு கொண்டே இருந்தார் விநாயகர்.
குபேரனும் ஓய்ந்து போனார். விநாயகரின் பசியை ஆற்ற அவர் அரண்மனையிலேயே உணவு இல்லாமல் போனது. கைலாசத்திற்கு விரைந்த குபேரன் சிவபெருமானிடம் சரணாகதி அடைந்தார். ‘என்னை காப்பாற்றுங்கள் தேவனே”, என கெஞ்சினார். “உங்கள் மகன் என் ராஜ்யத்தின் அனைத்து செல்வத்தையும் வற்றடித்து விட்டார். ஆனாலும் அவருக்கு பசி அடங்கவில்லை. நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என தயவு செய்து கூறுங்கள்!” என கூறினார். “குபேரா, தன் பசியை போக்க விநாயகருக்கு அதிகமான பதார்த்தங்கள் தேவையில்லை. அவருக்கு தேவை தன் பசியை போக்கும், அன்பு மற்றும் பாசத்துடன் பரிமாறும் உணவே.” என புன்னகைத்தார் சிவபெருமான்.
கடைசியில் குபேரனுக்கு புரிந்தது. தன் தவறை உணர்ந்த அவர் சிவபெருமானிடம் மன்னிப்பு கோரினார். இருப்பினும் விநாயகருக்கு பசி அடங்கவில்லை. கடைசியாக, பார்வதி தேவியிடம் இருந்து கொஞ்சம் சாதத்தை வாங்கி, அதனை எளிமையுடன், தன் விருந்தை ஏற்றுக்கொள்ளுமாறு விநாயகருக்கு படைத்தார். அதனை வாங்கிய விநாயகர் பசி தீர்ந்தது என ஒரு வழியாக கூறினார்.
பணிவுடன் நடந்து கொள்ள குபேரனுக்கு விநாயகர் எடுத்த பாடமே இது.
குபேரனின் மொத்த செல்வமும் காலி ஆகும் அளவிற்கு சாப்பிட்டதால் விநாயகருக்கு பெரிய தொந்தி வந்தது.