Spread the love

முன்னொருக் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் மதுரைப்  பதியை ஆட்சிபுரிந்து வந்தான் பாண்டிய மன்னனின் ஆட்சியில் தவறாமல் மழைப்  பெய்து விவசாயம் செழித்து மக்கள் அனைவரும் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தனர்.   


பாண்டிய மன்னனுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செழிப்புடன் நடைபெற்று அரண்மனை கஜானாவில் செல்வம் நிறைந்து வந்தது.


பாண்டிய மன்னன் நிலத்தில் நெல், பயிறு, மா , பலா, வாழை, இப்படி பல்வேறு பழங்கள், காய்கறிகள் என்று பல வகை விவசாயங்கள் செய்யபட்டது.


அதில் வாழைத்தோட்டத்துக்கு என்று தனியாக 21 காவலர்களை நியமித்தார் பாண்டிய மன்னன். அவர்களே அந்த தோட்டத்திற்கான நீர் பாய்ச்சுவது, களை எடுப்பது, காவல் காப்பது என அனைத்து வேலைகளையும் செய்து வந்தனர். சில காலம் மன்னன் வாழை தோட்டத்தின் பக்கம் சென்று கவனிக்கவில்லை. அமைச்சர்களும் காவலுக்கு ஆள் இருப்பதால் என்ன நடந்தாலும் அறிவிப்பு வரும் என்பதால் வாழைத் தோட்டத்தை கண்டு கொள்ளவில்லை.

இந்த சமயத்தில் ஒரு நாள் வாழைத்தோட்ட காவலாளிகள் 21 பேரும் வாழை குலைகளை திருடி விட்டதாகவும் மன்னவருக்கு தெரியாமல் அதை விற்றுவிட்டதாகவும் அரண்மனைக்கு தகவல் கிடைக்கிறது.

இந்த செய்தியை அறிந்த மன்னன் கடுமையான கோபம் கொண்டு அந்த காவலாளிகளை பிடித்துவர உத்தரவிடுகிறார்.

அரண்மனை காவல் படை ஆட்கள் அந்த 21 வாழைத்தோட்ட காவலர்களை மன்னர் முன் பிடித்து கொண்டு வந்து நிறுத்தினர். பாண்டிய மன்னர் அவர்களுக்கு தண்டனையாக நாட்டில் எந்த வேலையும் கொடுக்காமல் நாட்டை விட்டு விரட்டியடித்தான்.

உயிருக்கு பயந்து 21 வாழைத் தோட்ட காவலாளிகளும் நாட்டை விட்டு வெளியேறினார்கள். இந்த சம்பவத்தால் அரண்மனைக்கு சொந்தமான வாழைத் தோட்டங்கள் பயிரிடப்படாமல் சில ஆண்டுக்களுக்கு தரிசாக இருந்தது.


பாண்டிய மன்னனுடைய வாழைத் தோட்டங்களில் இந்த திருட்டு சம்பவம் நடந்து சில காலங்கள் ஆகிவிட்டது. இந்த சூழ்நிலையில் பாண்டியனுக்கு தீடீரென ஒரு நாள் அந்த வாழைத் தோட்டங்களில் மீண்டும் வாழை பயிரிட வேண்டுமென்று யோசனை தோன்றியது.


உடனே தனது அமைச்சரை அழைத்து ஆலோசனையும் கேட்டார் பின்னர் அமைச்சரிடம் பாண்டிய மன்னன் அமைச்சரே! அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் வேண்டிய காவலர்களை வரவழைத்து மீண்டும் அங்கு வாழை பயிரிடவேண்டும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்றான்.

மன்னரின் கட்டளைப்படி தோட்டத்தில் வாழை நடவு செய்யப்பட்டது. தோட்டத்தில் பச்சை வாழை, நாட்டு வாழை, மலை வாழை, நவரை வாழை, சர்க்கரை வாழை, செவ்வாழை, பூவன் வாழை, கற்பூர வாழை, மொந்தன் வாழை, நேந்திர வாழை, கரு வாழை, அடுக்கு வாழை, வெள்ளை வாழை, ஏலரிசி வாழை, மோரீஸ் வாழை, வெள்ள தொழுவன், மஞ்ச தொழவன், பச்சைத் தொழுவன் இப்படி அனைத்து விதமான வாழைகளும் நடவு செய்யப்பட்டது.


வாழைகளை நடவு செய்த பிறகு அமைச்சர் பாண்டிய மன்னனிடம் சென்று தோட்டத்தை காவல் காப்பதற்காக காவலர்களை நியமிக்க வேண்டும் என்றார்.


அதற்கு மன்னன் அமைச்சரே! இதற்கு முன்பு காவலுக்கு எப்போதும் 21 பேரை காவலுக்கு வைப்போம் ஆனால் சென்ற முறை காவலுக்கு இருந்தவர்கள் நமது தோட்டதிலேயே திருடி அந்த குலைகளை விற்பனை செய்து காவலாளிகள் திருடர்களாக மாறிவிட்டார்கள். நமக்கு துரோகம் செய்துவிட்டார்கள். இனி வாழை தோட்டத்தை காவல் காக்க புதிதாக காவல்காரர்களை நியமியுங்கள் என்றார் பாண்டிய மன்னர்.

உங்கள் விருப்பம் அப்படியே செய்கிறேன் மன்னா நல்ல காவலாளிகள் எங்கே கிடைப்பார்கள் என்று தூதுவர்களை அனுப்பி கேட்டு புதிய திறமையான காவலாளிகளை கொண்டு வருகிறேன் என்றார் அமைச்சர்.


எனவே அரசாங்க வாழைத் தோட்டத்திற்கு புதிய காவலர்களை தேடி தேடி கடைசியில் ஒரு வழியாக அமைச்சருக்கு நல்ல செய்தி கிடைத்தது உடனே பாண்டிய மன்னனை சந்தித்தார் அமைச்சர்.


மன்னா அடவி மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவலுக்கு பெயர் பெற்றவர்கள் அவர்களில் சிலரை நமது தோட்டத்திற்கு காவல் காக்க புதிய காவலாளியாக நியமிக்கலாம் என்றார் அமைச்சர் மன்னரும் சம்மதித்தார்.

அதன்படி அடவி மலைப் பகுதிக்குச் சென்று 21 புதிய காவலாளிகளையும் வாழை தோட்டத்தை காவல்காக்க அழைத்துவந்தனர்.

21 காவலர்களுக்கும் சம்பளமாக முதலில் போடும் வாழை குலைகள் அரசாங்கத்துக்கு உரியது என்றும் இரண்டாவது பயிரிட்டு அடுத்ததாக போடும் வாழை குலைகள் காவல் காக்கும் உங்களுக்கு என்றும் சம்பளம் பேசி முடிக்கப்பட்டது. அதன்படி 21 காவலாளிகளுக்கும் வாழைத் தோட்டத்துக்குள்ளவே குடிசை போட்டு கொடுக்கப்பட்டது அதிலேயே அந்த இருபத்தி ஒரு காவலாளிகளும் தங்கி இருந்தனர்.

 அந்த 21 காவலாளிகளும் தங்களுடைய குல தெய்வமான குலைவாழை இசக்கி அம்மனை அவர்கள் தங்கியிருந்த வாழை தோட்டத்தில் வைத்து பூசை செய்து வழிபட்டு வந்தனர்.

இவ்வாறு வணங்கிவந்த குலைவாழை இசக்கி அம்மனை அடவி மலையை சேர்ந்தவர்கள் தங்கள் காவல் தெய்வமாகவும் குலம் காக்க வந்த குல தெய்வமாகவும் வணங்கி வந்தனர் அதன் காரணமாகவே இந்த 21 காவலாளிகளும் வாழைத் தோட்டத்தில் தங்களுடைய குடிசைகளுக்கு அருகில் குலை வாழை இசக்கி அம்மனை வைத்து வணங்கி வந்தனர்.

 இவ்வாறாக அந்த 21 காவலாளிகளும் வாழைத் தோட்டத்தை காவல் காத்து வருகின்றனர். நாட்கள் மெல்ல நகரத் தொடங்கியது அந்த 21 காவலாளிகளும் வாழைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சி உரம் வைத்து காட்டு மிருகங்கள் பயிர்களை மேயாமல் கண்ணும் கருத்துமாக காத்து வந்தனர். வாழை மரங்களும் நன்றாக வளர்ந்து குலைகள் போட்டது. அவற்றை பார்த்த 21 காவலர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த குலைகளை மன்னன் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார். நிச்சயம் வெகுமதியும் தருவார் என்ற நம்பிக்கையோடு 21 பேரும் இருந்தனர்.

இந்நிலையில் தான் ஏற்கனவே வாழைத் தோட்டத்தை காவல் காத்து பின்னர் வாழை குலைகளை  திருடி விற்ற குற்றத்திற்காக மன்னரால் நாட்டை விட்டு துரத்தியடிக்கபட்ட 21 காவலர்களும் இந்த விஷயத்தை அறிந்தனர். அவர்களில் ஒருவன் தன் தலைவனிடம் அண்ணே! காலங்காலமாக அந்த பாண்டிய மன்னனின் வாழைத் தோட்டத்தில் நாம்தான் காவல்காத்து வந்தோம். ஆனால் இப்போது வாழைத் தோட்டங்களை அமைத்து புதிதாக காவலர்களையும் நியமித்து பாண்டிய மன்னன் நமக்கு துரோகம் செய்துவிட்டான். அதனால் பாண்டிய மன்னனையும் அந்த புதிய 21 காவலர்களை நாம சும்ம விடக்கூடாது. நமக்கு கிடைக்க வேண்டிய வேலையை தட்டிப்பறித்த 21 காவலர்களை நாம் பழிக்கு பழிவாங்கியே தீர வேண்டும் என சொன்னான் ஒருவன். இதை கேட்டு கொண்டு இருந்த மற்ற காவலாளிகளும் இதற்கு சம்மதித்தனர் உடனே கூட்டத்திலிருந்து ஒரு திட்டத்தை சொன்னான் அண்ணே நாம் அனைவரும் இரவோடு இரவாக அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது தோட்டத்திற்குள் புகுந்து  நாம் 21 பேரும் ஆளுக்கு ஒரு குலையை வெட்டி திருடிவிட வேண்டும். தோட்டத்தை காவல்காக்கும் புதிய காவலாளிகளும் 21 பேர் திருடும் வாழைக் குலைகளும் 21 ஆக இருக்க வேண்டும். இதனால் நிச்சயமாக பண்டியன் அவர்கள் மீது சந்தேகபடுவான் அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் பண்டியனுக்கும் இது பாடமாக இருக்கும் நம் மீது யாருக்கும் எந்தவித சந்தேகமும் வராது.

மேலும் வேறு வழியின்றி பண்டிய மன்னன் மீண்டும் நம்மை இந்த தோட்டத்திற்கு காவல் செய்ய அழைப்பார் என பழைய 21 காவலாளியில் ஒருவன் சொல்ல அனைத்து பழைய காவலாளிகளும் இதற்கு சம்மதிகிறார்கள்.


அன்று இரவே திட்டப்படி 21 பழைய காவலாளிகளும் வாழைத் தோட்டத்துக்குள் நுழைந்து 21  வாழைக் குலைகளை அறுத்து திருடிக் கொண்டு சென்றுவிடுகின்றனர்.


இந்த சம்பவம் நடந்த மறுநாள் மன்னன் அமைச்சரை அழைத்த கொண்டு நீண்ட நாட்கள் ஆனதால் வாழைத் தோட்டத்தை சுற்றிப் பார்க்க புறப்பட்டனர். பாண்டிய மன்னனும் அமைச்சருமாக தோட்டத்திற்கு வந்து இருவரும் சுற்றி பார்த்தார்கள் அப்படி அவர்கள் பார்த்துக் கொண்டு வரும் பொழுது ஓரிடத்தில் தலையில்லாத முண்டம் போல குலைகள் இல்லாத வாழை மரங்களை கண்டார் மன்னர்.

குலைகள் இல்லாத வாழை மரத்தை கண்ட மன்னன் பெரும் அதிர்ச்சி அடைந்தார். பின் அமைச்சரை அழைத்து அமைச்சரே வாழை குலைகளை வெட்ட நீங்கள் ஏதாவது அனுமதி கொடுத்தீரா என கேட்டார் உடனே அமைச்சர் இல்லை மன்னா நான் எந்த உத்தரவும் கொடுக்கவில்லை இன்று தான் நானும் உங்களோடு முதன்முறையாக இந்த வாழைத் தோட்டத்துக்குள் வருகிறேன் என்றார் அமைச்சர்.

மன்னன் வாழை குலைகளை கவனித்தான் மொத்தம் 21 குலைகள் வெட்டபட்டு இருந்தது மன்னன் அமைச்சரிடம் 21 குலைகள் வெட்டபட்டுள்ளது இங்கே நாம் காவலுக்கு வைத்திருக்கும் காவலாளிகளும் 21. நிச்சயமாக இவர்கள் தான் ஆளுகொன்றாக வெட்டியிருக்க வேண்டும் சந்தேகமே இல்லை. அவர்கள் வாழை குலைகளை வெட்டுவதற்கு முன்பு நம்மிடம் அனுமதி கேட்டிருக்க வேண்டும். இவர்களை காவலுக்கு வைக்கும் போதே சம்பளம் பேசப்பட்டது முதல் விளைச்சல் அரசாங்கத்துக்குரியது என்றும் இரண்டாவது விளைச்சல் தான் காவலாளிகளுக்குரியது என்றும் பேசி ஒப்பந்தம் செய்யபட்டது. இப்படி ஒரு ஒப்பந்தம் இருக்கும் போது அவர்கள் எப்படி நமக்கு தெரியாமல் முதல் விளைச்சலை எடுக்கலாம் என்று கோபமாக பேசினார் பாண்டிய மன்னன்.


மேலும் பாண்டிய மன்னன் மிகுந்த ஆத்திரத்தோடு அமைச்சரே. இந்த முறை வாழை குலைகளை திருடிய காவலாளிகளை சும்மா விடக்கூடாது ஏற்கனவே இதே போல முன்பு ஒரு சம்பவம் நடந்ததற்கு அந்த 21 காவலாளி களையும் சும்மா விட்டதால் தான் தற்போது இந்த காவலர்களும் அதேபோல திருடி உள்ளார்கள்.


அமைச்சரே நமக்குத் தெரியாமல் நம்முடைய வாழைத் தோட்டத்தில் திருடி விட்டார்கள் இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து இனி யாருமே இது போல ஒரு தவறை செய்யக்கூடாது அப்படிப்பட்ட ஒரு தண்டனையை நாம் கொடுக்க வேண்டும். எனவே காட்டுக்கு ஒவ்வொரு திசையாக 21 பேரையும் வெட்டி கொன்று விடுங்கள் என்று மன்னன் உத்தரவிட்டான்.

மன்னரின் உத்தரவை அமைச்சர் செயல்படுத்தினார். அன்று இரவு 21 காவலர்களும்  மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தனர். வாழை குலைகள் திருடபட்ட விஷயம் அவர்களுக்கு தெரியாது அப்போது தீடீரென மன்னனின் படையாட்கள் அங்கு வந்து அவர்களை வெட்டத் தொடங்கினார்கள். ஒரு பாவமும் அறியாத காவலாளிகள் ஏன் வெட்டுகிறார்கள் எதற்காக வெட்டுகிறார்கள் என்று தெரியாமல் அலறியடித்தபடி ஓடத் தொடங்கினார்கள். அவர்களை  விரட்டி விரட்டி திசைக்கு ஒருவராக வெட்டி கொன்றனர்.


இப்படி கொடுரமான கொலை செய்யபட்ட 21 காவலாளிகளின் உயிர்களும் அதே தோட்டத்தில் அவர்கள் குல தெய்வமாக வைத்து வணங்கி கொண்டு இருந்த குலைவாழை இசக்கி அம்மனின் காலடியில் தஞ்சமடைந்து காலடியை பிடித்து கதறி அழுது வேண்டினார்கள் அம்மா குலைவாழை இசக்கி ஒரு பாவமும் நாங்கள் செய்யவில்லை எங்களை எதற்காக இப்படி ஓட ஓட விரட்டி அநியாயமாக கொன்றனர் என 21 காவலாளிகளும் கேட்க அம்மை குலைவாழை இசக்கி அவர்கள் முன் தோன்றி பிள்ளைகளே!  பழைய காவலாளிகள் செய்த சூழ்ச்சியால் நீங்க கொல்லபட்டீர்கள் என நடந்ததை சொன்னார் 

அதை கேட்டு கோபம் கொண்ட 21 காவலாளிகளும் அம்மா ஒரு பாவமும் செய்யாமல் காவல்காத்த எங்களை திருடர்களாக நினைத்து எந்த விசாரணையும் செய்யாமல் செய்யாத குற்றத்திற்கு அநியாயமாக கொன்ற பண்டிய மன்னனையும் அந்த பழைய காவலர்களையும் பழிக்கு பழி வாங்க வேண்டும் நாங்கள் இருபத்தியோரு பேரும் சேர்ந்து இந்த பாண்டிய நாட்டை மண்புழுதிக் காடாக மாற்ற வேண்டும் அதற்கு அம்மா தாயே! எங்களுக்கு நீதான் வரம் தர வேண்டும் என 21 பேரும் கேட்டார்கள்.  

அப்போது குலைவாழை இசக்கி அவர்களிடம் என் பிள்ளைகளே நீங்கள் எந்த பாவமும் செய்யாதவர்கள் எனக்கு தெரியும் உயிர் பலி வாங்கிவிட்டான் பாண்டிய மன்னன் அதுவும் எனக்கு தெரியும் உங்களுக்கு வரம் கொடுக்க நானோ ஈசனிடம் வரம் வாங்கி வரவில்லை. என் பிள்ளைகளே நான் இசக்கி அம்மனிடம் வரம் வாங்கி வந்தவள் வரம் கொடுக்க என்னால் முடியாது சிவப் பெருமானால் மட்டுமே உங்களுக்கு வரம் தர முடியும். என் பிள்ளைகளே நீங்கள் அனைவரும் என்னோடு வாருங்கள் கைலாச மலைக்கு சிவப்பெருமானை சந்திக்க நான் உங்களை அழைத்து போகிறேன் அங்கே சிவப் பெருமானிடம் உங்களுக்கு வேண்டிய வரத்தை பெற்றுகொள்ளுங்கள் என்று கூற அப்படியாக இருபத்தியோரு பேரும் குலைவாழை இசக்கியோடு ஆண்டவனை சந்தித்து வரங்களை பெற கைலாயம் வருகிறார்கள்.


கைலாயம் சென்று சிவப் பெருமானை கண்ட குலைவாழை இசக்கி. ஆண்டவன் பெற்பாதங்களை வணக்கி ஆண்டவா இதோ கைகளை கூப்பி வணங்கி நிற்கிறார்களே இவர்கள் இருபத்தியோரு பேரும் எனது பிள்ளைகள் இவர் ஒரு பாவமும் செய்யாதவர்கள் அவர்களை எந்த விசாரணையும் செய்யாமல் அநியாயமாக பண்டிய மன்னன் காட்டுக்கொரு திசையாக வெட்டி கொன்றுவிட்டான் என்று சிவப்பெருமானிடம் கூறினாள் அம்மை குலைவாழை இசக்கி. 

இதை கேட்ட சிவப் பெருமான் சரி இவர்களை இங்கே ஏன் அழைத்து வந்தாய் என கேட்க ஆண்டவா நீதி தவறி அநியாயமாக உயிர் பலி எடுத்த பாண்டிய மன்னனை பலி வாங்க இவர்கள் நினைக்கிறார்கள் நாங்களாக எதுவும் செய்ய முடியாது அதற்கு நீங்கள் தான் வரம் கொடுக்க வேண்டும் ஆண்டவா. தாங்கள் வரம் கொடுத்தால் தான் நினைத்தகாரியத்தை நாங்கள் முடிக்க முடியும் என வேண்டினாள் குலைவாழை இசக்கி அம்மை.


இதை கேட்ட ஆண்டவன் சிவப்பெருமான் அம்மா குலை வாழை இசக்கி உன் பிள்ளைகளுக்கு வரம் வேண்டுமென கேட்கிறாய் ஆனால் இவர்கள் சாதாரண மானிடப் பிறவியாக பிறந்து இறந்தவர்கள் அவர்களுக்கு உடனே வேண்டிய வரங்களை கொடுத்து தெய்வமாக்கி  எப்படியம்மா பூலோகம் அனுப்ப முடியும் என்றார். 


ஆண்டவா ஈசனை தேடிவந்தவர்கள் வரம் பெறாமல் போக முடியுமா நானும் என் பிள்ளைகளும் நீங்கள் சொல்வதை கேட்கிறோம். கேட்கும் வரங்களை தந்து அருள வேண்டும் சுவாமி என வணங்கி நின்றாள் அம்மை.

உடனே சிவப்பெருமான் அம்மா வரம் கொடுக்க வேண்டுமென்றால் முதலாவதாக உனது பிள்ளைகளை நான் சோதிக்க வேண்டும் அந்த சோதனையில் அவர்கள் வெற்றி பெற வேண்டும். அப்படி அந்த சோதனைகளில் வெற்றி பெற்றார்கள் என்றால் அவர்களுக்கு பெயர் நாமத்தையும் சூட்டி வேண்டிய வரங்களையும் கொடுப்பேன் என்றார் சிவப்பெருமான். 


குலை வாழை இசக்கி அம்மை அந்த சோதனைகள் என்னென்ன என்று கேட்க. சிவப் பெருமான் அம்மா உன் பிள்ளைகள் ஏழு பிறவி எடுத்து நான் வைக்கும் சோதனையை கடந்து வர வேண்டும். அதாவது உன் பிள்ளைகள் தெய்வமாக தகுயுடையவர்கள் தானா என்பதற்காக தான் இந்த சோதனை இதில் உனக்கு சம்மதமா என கேட்டார் ஆண்டவன். அப்படியே ஆகட்டும் என சம்மதித்தாள் அம்மை. 

ஐயனே என் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு பிறவியாக சொல்லுங்கள் அந்த பிறவியை எடுத்து அந்த சோதனையை என் பிள்ளைகள் கடந்து வெற்றி பெறுவார் என்றாள் குலைவாழை இசக்கி அம்மை.


 அதன் படி சிவப்பெருமான் அம்மா குலை வாழை இசக்கி உன் பிள்ளைகளுக்கு முதல் பிறவியில் சோதனை சொல்கிறேன் கேள் என்று முதல் பிறவியை சொன்னார்.

அதாவது முதல் பிறவியில் பிறந்து கடல் அலையை எண்ணி வர வேண்டும் அப்படி எண்ணி முடித்தால் முதல் பிறவி பூர்த்தியாகும் என்றார் சிவப் பெருமான். இதற்கு 21 பேரும் சம்மதிக்கிறார்கள். 

முதல் பிறவி.

சிவப் பெருமான் சொன்னபடி முதல் பிறவியை முடிக்க அம்மை பிள்ளைகளை அழைத்து பூலோக பிறவியேடுத்து பிள்ளைகள் கடற்கரையில் அமர்ந்து கடல் அலையை எண்ண தொடங்கினார்கள். 

கடல் அலைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தது இப்படியே எட்டோடு எட்டாக 16 நாட்கள் கடந்தது 21 பேரும் அந்த அலைகளை எண்ணிக் கொண்டே இருந்தனர். ஆனால் அவர்களால் எண்ணி முடிக்க முடியவில்லை அலைகள் வந்து கொண்டே இருந்தது உடனே குலைவாழை இசக்கியிடம் சென்று தங்களால் எண்ண முடியவில்லை என்று கூறினார்கள். உடனே குலை வாழை இசக்கி நேராக பார்வதி தேவியிடம் சென்று. அம்மா சிவபெருமான் அலையை எண்ணி வரச் சொன்னார் அது எங்களால் முடியவில்லை தாயே! என் பிள்ளைகளுக்கு நீதான்  உதவ வேண்டும்  தாயே என்றார். அதை கேட்டு மனம் உருகிய அம்மை பார்வதி தேவி அம்மா குலை வாழை இசக்கி அலைகளிலே இரண்டே இரண்டு அலைகள் தான் உண்டு ஒன்று ஆண் அலை, அது ஆதிபரன் ஆண் அலை, இரண்டு பெண் அலை அம்மை உமை பெண் அலை, என இரண்டு அலைகள் தான் உள்ளது இதை உன் பிள்ளைகளிடம் சொல்லி சிவபெருமானிடம் சென்று சொல்லச் சொல் என்றார். அதன்படியே 21 பேரும் சிவபெருமானிடம் சென்று சொல்ல சரியாக சொன்னதால் முதல் பிறவி முடிந்துவிட்டது என்றார் சிவபெருமான்.

இரண்டாவது பிறவி.


சிவபெருமான் அடுத்த பிறவியை குலைவாழை இசக்கியிடம் கூறினார் அம்மா உன் பிள்ளைகளுக்கு அடுத்த பிறவியின் சோதனை என்னவென்றால் வடவால் மரத்தின் இலைகளை எண்ணி எத்தனை இலை என்று சொல்ல வேண்டும் என சிவப்பெருமான் சொல்ல அம்மை குலைவாழை இசக்கி வடவால் என்றால் என்னவென்று கேட்க ஈசன் அம்மா கைலாசத்துக்கு வடக்குப் புறம் இருக்கும் ஆலமரத்தை தான் வடவால் மரம் என்பார்கள் அந்த ஆலமரத்தில் எத்தனை இலைகள் உள்ளன என்பதை எண்ணி வரவேண்டும் என்றார். அதன்படி 21 பேரும் மறுபிறவி எடுத்து ஆலமரத்தில் உள்ள இலைகளை எட்டோடு எட்டாக ஆக மொத்தம் 16 நாட்கள் எண்ணினார்கள் ஆனால் அவர்களால் எண்ண முடியவில்லை, ஏனென்றால் மரத்தில் ஒரு பக்கம் இலைகள் உதிர்ந்து கொண்டே இருந்தது மறுபக்கம் இலைகள் துளிர்த்துக் கொண்டே இருந்தது அதனால் அவர்களால் மரத்தில் உள்ள இலைகளை எண்ண முடியவில்லை இதனை குலைவாழை இசைக்கியிடம் சென்று கூறினார்கள் உடனே குழைவாழை இசைக்கி பார்வதி தேவியிடம் மீண்டும் ஓடி சென்று அம்மா ஆதிபராசக்தி என் பிள்ளைகளால் சிவப்பெருமான் வைத்த சோதனையில் வெற்றி பெற முடியவில்லையம்மா என நடந்தவற்றை கூறி நீதான் வழிகாட்ட வேண்டும் என அம்மை பராசக்தியின் பொற் பாதத்தில் சரணமடைந்தாள் அதற்க்கு பார்வதிதேவியார் அம்மா குலைவாழை இசக்கி அந்த மரத்தில் இருப்பது இரண்டே இரண்டு இலைகள் தான் ஒன்று பழுத்த முதிர்ச்சி அடைந்த இலை, இரண்டாவது துளிர்க்கின்ற இலை இதை உன் பிள்ளைகளுக்கு சொல் என பார்வதி தேவியார் சொன்னார். உடனே குலைவாழை இசக்கியம்மன் இதை 21 பேரிடமும் சென்று கூறினார்  அதை கேட்ட 21 காவலாளிகளும் அந்த விடையை உடனே சிவபெருமானிடம் சென்று சொன்னார்கள் மிக சரியான விடை என இரண்டாவது பிறவியை முடித்து வைத்தார் சிவப்பெருமான். 

மூன்றாம் பிறவி. 


இரண்டு பிறவியை முடித்த பிறகு அடுத்து மூன்றாவது பிறப்பைப் பற்றி கூறினார் சிவப்பெருமான். அம்மா குலைவாழை இசக்கி உன் பிள்ளைகள் 21 பேரும் மூன்றாவது பிறவியாக அக்னி தூணை தழுவி பிறந்து வர வேண்டும் என சொல்ல அதை கேட்ட 21 பேரும் அடுத்த பிறவியேடுத்து அக்னி தூணை பிடித்து தழுவும் போது அதிலிருந்து வரும் வெப்பம் உடலை சுட 21 பேரும் அம்மா! அம்ம! என தூணின் வெப்பம் தாங்காமல் அலறினார்கள் இதை பார்த்த குலை வாழை இசக்கி அம்மை வேறுவழியில்லை அன்னை ஆதிபராசக்தி ஆகிலாண்டேஸ்வரி பார்வதி தேவியால் தான் உதவ முடியும்  என அன்னையிடம் உதவி கேட்க அன்னை பார்வதி தேவி குலைவாழை இசக்கி அம்மைக்கு ஒரு பிரம்பை கொடுக்கிறார் அதை கொண்டு வந்து அக்னி தூணின் மீது ஓம் ஆதிபராசக்தியே போற்றி என குலைவாழை இசக்கி அடிக்க அக்னி தூண் தீ எரிந்து கொண்டு இருக்கும் போதே குளிர்ந்து போனது அதை பிடித்து 21 காவலாளிகளும் தழுவிக் கொண்டு துள்ளி குதித்து விளையாடி கொண்டு வருகிறார்கள் அந்த பிறவியும் வெற்றிகரமாக முடிந்தது. 


நான்காவது பிறவி. 


முன்றாவது பிறவியை முடித்து சிவப்பெருமானிடம் வந்து நிற்கிறார்கள் 21பேரும் அம்மா! குலைவாழை இசக்கி உன் பிள்ளைகள் மூன்று பிறவியெடுத்து மூன்று சோதனைகளையும் முடித்துவிட்டார்கள் இப்போது நான்காவது பிறவி சொல்கிறேன் கேளுங்கள். நான்காவது பிறவியாக 21 பேரும் கழுமுனையில் ஏறி வர வேண்டும் என்று சொல்கிறார் இதற்கு 21 பேரும் சம்மதிக்கவே. சிவப்பெருமான் தேவ கணங்களே 21 பேரையும் கழுவில் ஏற்ற சரியான கழு உடனடியாக தயார் செய்யுங்கள் என சொல்ல 21 கழுமுனை தயார் செய்யப்படுகிறது. 21 பேரையும் கழுமுனையில் போடுகிறார்கள். வலி தாங்க முடியாமல் 21 பேரும்  அம்மா அம்மா வலி தாங்க முடியவில்லையம்மா என கதறி அழுதனர் அதை பார்த்த குலைவாழை இசக்கி அம்மைக்கு தாங்க முடியவில்லை உடனே ஓடோடினார் பார்வதி தேவியிடம்.  அம்மா என் பிள்ளைகளை கழுவில் போட்டு வலியில் துடிக்கிறார்கள் அம்மா நீதான் காப்பற்ற வேண்டும் அம்மா என கேட்க பார்வதி தேவி அம்மா குலைவழை இசக்கி கவலைப்படாதே இதை பெற்றுக்கொள் எனது கொண்டை ஊசி இதை அந்த கழுமுனைக்கு அருகில் நாட்டி வை உன் பிள்ளைகளுக்கு எதுவும் ஆகாது என ஆசீர்வதித்து அனுப்பினார்.

 
தேவின் கொண்டை ஊசியை பெற்றுக் கொண்ட குலைவாழை இசக்கி  21 கழுமுனைக்கு நடுவில் அதை நட்டு வைக்க அனைத்து கழுமுனைகளும் பலம் இழந்து வலி இல்லாமல் கழுமுனையில் இருந்து 21 பிள்ளைகளும் கீழே இறங்கினார்கள் அவர்களை அழைத்துக் கொண்டு சிவப்பெருமானிடம் வந்தாள் குலைவாழை இசக்கி அம்மை. 

ஐந்தாவது பிறவி. 


சிவப்பெருமான் அவர்களை பார்த்து அம்மா குலைவாழை இசக்கி நன்கு பிறவிகளை உன் பிள்ளைகள் முடித்து விட்டார்கள் அடுத்ததாக ஐந்தாவது பிறவி கல்லறைக்குள் பிறந்து வரவேண்டும் என்றார். 

அதாவது ஒரு பெரிய குழி தோண்டி அந்த குழிக்குள் அடைத்து பெரிய பாறாங்கல்களை கொண்டு முடி அதற்கு மேற் கற்களை கொண்டு கல்லறை கட்டிவிடுவார்கள். அதிலிருந்து வெளியே வர வேண்டும். இதையும் 21 பேரும் சம்மதிக்கிறார்கள் உடனே ஈசன் தேவ ஆட்களை அழைத்து மாந்தையர்களை கொண்டு பெரிய குழி எடுத்து கல்லறை கட்டி 21 பேரையும் அடைக்க உத்தரவிட்டார் அதைப் போல 21 பேரும் கல்லறைக்குள் அடைக்கபட்டனர் வெளியில் பிள்ளைகளுக்காக குலைவாழை இசக்கி காத்துக்கொண்டு இருந்தார் எட்டோடு எட்டு பதினாறு நாட்கள் ஆகியும் பிள்ளைகள் வெளியில் வரவில்லை. அந்த கல்லறையை சுற்றி வந்து என் பிள்ளைகளே வெளியில் வாருங்கள் என அழைத்தும் பயனில்லை அன்னை பார்வதியிடம் தஞ்சமில்லாமல் பிள்ளைகளை காக்க முடியாது என அன்னை பார்வதி தேவியிடம் பிள்ளைகளை காப்பாற்று என தஞ்சமடைந்தாள் அம்மை குலைவாழை இசக்கி இதை கண்ட பார்வதி தேவி அம்மா குலைவாழை இசக்கி நான் இருக்க கவலை வேண்டாம் இதோ இந்த பெற் பிரம்பை வாங்கி கொள் என்னை நினைத்து கொண்டு கல்லறையை ஒரு தட்டு தட்டினால் கல்லறை பிளக்கும் உன் பிள்ளைகள் வெளியில் வருவார்கள் என ஆசீ கூறி அனுபினார் பார்வதி தேவி.

பார்வதி தேவியிடம் பெற் பிரம்பை பெற்றுக்கொண்டு குலைவாழை இசக்கி 21 பிள்ளைகள் அடைபட்டு இருந்த கல்லறைக்கு வருகிறார் கல்லறையில் ஆதிபராசக்தி என ஒரு தட்டு தட்டவே பாறைகள் பிளந்தது உள்ளே இருந்து பிள்ளைகள் ஆதாளி போட்டுக் கொண்டு குதித்து வருகிறார்கள் அம்மை சந்தோஷத்தோடு அவர்களை சிவப்பெருமானிடம் அழைத்து செல்கிறாள்.

ஆறாவது பிறவி. 


இப்போது சிவப்பெருமான் அம்மா குலைவாழை இசக்கி உன் பிள்ளைகள் கல்லறையில் பிறந்து வந்துவிட்டார்கள் ஐந்தாவது சோதனை முடிந்தது. அடுத்ததாக ஆறாவது பிறவி கொதிக்கும் மஞ்சக்கிடாரத்தில் ஒரு பிறவி எடுத்து வர வேண்டும் என்றார்.

21 பேரும் ஆறாவது பிறவிக்கு சம்மதித்ததும் சிவப் பெருமான் தேவ ஆட்களை அழைத்து பெரிய அடுப்பு போட வைத்து யானையின் தோலில் துரத்தி செய்து அனல் ஊதி அடுப்பு எரித்து 21 பேர் மூழ்கிவிடும் அளவுக்கு பெரிய மஞ்சள்கிடாரத்தை வைத்து ஒரு கோடி மந்திரங்களை சிவன் சொல்ல தண்ணீர் கொதிக்கிறது. 

அந்த மஞ்சள்கிடாரத்தில் இறங்கி வர வேண்டும். வரம் கிடைக்குமே என்ற காரணத்திற்காக உள்ளே இறங்கினார்கள் வலி தாங்க முடியாமல்  அம்மா அம்மா காப்பாற்று அம்மா என அலறினார்கள் பிள்ளைகள் மஞ்சள்கிடாரத்திற்குள் படும் கஷ்டத்தை பார்த்து பெறுக்க முடியவில்லை குலை வாழை இசக்கி அம்மைக்கு உடனே அன்னை பார்வதியிடம் உதவி கேட்க அன்னை ஆதிபராசக்தி 

கை நிறைய மஞ்சள் பொடியை கொடுத்து இதை கொண்டு சென்று என்னை நினைத்துக் கொண்டு மஞ்சள்கிடாரத்தில் வீசு எல்லாம் சரியாகிவிடும் எனாறார் அதை போலவே குலைவாழை இசக்கியும் செய்தாள் மஞ்சள்கிடாரம் கொதித்தது ஆனால் சுடவில்லை இதானல் 21 பேரும் கொதிக்கும் மஞ்சள்கிடாரத்தில் குதித்து விளையாடி வருகிறார்கள் பொங்கி வரும் மஞ்சள்கிடாரத்தில் மூழ்கி வருகின்றனர்.  அதில் கடந்து வந்ததும் அவர்களை அழைத்து கொண்டு சிவப்பெருமானிடம் வருகிறார் அம்மை குலைவாழை இசக்கி.

ஏழாவது பிறவி. 


சிவப்பெருமான் ஏழாவது பிறவியை சொன்னார் ஏழாவது பிறவியாக, 21 பேரும் என்னுடைய திருச்சடையில் (தலை முடியில்) பிறந்து வரவேண்டும் என்றார்.

அனைத்து பிறவியிலுமே 21 பேரும்  தீராத துன்பங்கள், பொறுக்கமுடியாத வலிகள்  எல்லாம் பெற்று குலை வாழைக் இசக்கியின் அருளாலாலும் அன்னை பார்வதி தேவியாரின் உதவியாலும் ஆறு பிறவியை முடித்தார்கள். இதை எல்லாம் கண்டும் காணாதது போல் இருந்த சிவபெருமான் கடைசியாக இவர்களை தப்ப முடியாம‌ல் சிறைபடுத்த எண்ணினார்.

சிவனும் பார்வதி தேவியும் கலந்த திருவுருவம் கொண்டு தனது திருசடையை வளர வைத்தார். பன்னிரெண்டு ஆண்டுகாலமாக வளர வேண்டிய திருசடை 12 நாட்களில் வளர்ந்தது பின் திருசடை முடிக்குள் 21 பேரையும் சிறை வைத்து அடைத்தார்.

திருசடைகுள் அகப்பட்டுக்கொண்ட 21 பேரும் கதறினார்கள் ஆனால் இந்த முறை அம்மை குலை வாழை இசக்கியாலும் பார்வதி தேவியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை ஏனென்றால் பார்வதிதேவியின் திருச்சடையும் சிவப் பெருமான் திருசடையோடு பிணைந்து பின்னி இருந்தது.


எனவே பார்வதி தேவியால் அவர்களுக்கு உதவ முடியாமல் போனது, ஆனாலும் 21 பேரும் சிவபெருமானின் புகழை பாடினால் பிழைக்க வழியுண்டு என சிவப் பெருமானின் புகழை பாடினார்கள் உடனே சிவபெருமான் மனம் இறங்கி அவர்களை விடுவித்தார் இதன்மூலம் அவர்கள் ஏழு பிறவியையும் வெற்றிகரமாக முடித்தார்கள்.

மேலும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *