திருத்தணி முருகன் கோயில் (Thiruthani Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.
தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி ஆகும். ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும், திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.
இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. சரவணப் பொய்கை என்ற புகழ்மிக்க குமார தீர்த்தம் என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது. இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது மடம் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் அருணகிரிநாதர் இதை அழகு திருத்தணி மலை எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.