மண்ணுண்ணி மாப்பிள்ளையே காவிறையே,
கூவிறையே உங்களப்பன்
கோவில் பெருச்சாளி,
கன்னா பின்னா மன்னா
தென்னா சோழங்கப் பெருமானே.!”
இந்தப்பாடலுக்குப் பின் ஒரு சுவையான கதையும் உள்ளது.
கம்பர் சோழமன்னனின் அவையில் புலவராக இருந்த காலத்தில், அங்கே இருந்த முட்டாள் ஒருவனுக்கு மன்னரை புகர்ந்து பாடி புகழ்பெறும் ஆசை வந்துவிட்டதாம், பாடல் எழுத வேண்டுமென்ற ஆசையில் யோசித்து யோசித்து பார்த்தானாம் எதுவுமே தோன்றவில்லையாம்,
யோசித்துக்கொண்டே தெருவில் நடந்து சென்றுகொண்டு இருந்தானாம் தெருவில் பிள்ளைகள் மண்சோறு ஆக்கிக்கொண்டு விளையாடிக்கொண்டு இருந்தார்களாம், இந்த மண்சோறு ஆக்கும் பொண்ணு மாப்பிள்ளை விளையாட்டில் பெண் குழந்தை மண் சோறை ஆண் பிள்ளைக்கு ஊட்டிவிட்டு மண்ணுண்ணி மாப்ளே மண்ணுண்ணி மாப்ளே என்று சொன்னார்களாம் அதை கேட்டதும் அந்த முட்டாள் புலவன் தனது பாடலுக்கு முதல் வரியாக அந்த ”மண்ணுண்ணி மாப்ளே ” என்பதை எழுதி கொண்டானாம்,
பின்னர் கொஞ்ச தூரம் நடந்து சென்றுகொண்டு இருந்தானாம் காகங்கள் கா… கா… என்று கரைந்துகொண்டு இருந்ததாம் உடனே ”காவிறையே” என்று எழுதிகொண்டானாம்,
மீண்டும் நடந்து சென்றானாம் குயில் ஒன்று கூவிக்கொண்டு இருந்ததாம் உடனே ”கூவிறையே” என்று எழுதிகொண்டானாம்.
கோவில் வீதியில் நடந்து சென்றுகொண்டு இருக்கும்பொழுது அங்கே இருவர் சண்டை போட்டுகொண்டு இருந்தார்களாம், அப்பொழுது ஒருத்தன் ”உங்களப்பன் கோவில் பெருச்சாளி” என்று திட்டுவது காதில் விழுந்ததாம் உடனே ”உங்களப்பன் கோவில் பெருச்சாளி” என்று எழுதி கொண்டு, எதிரே வந்த ஒருவனிடம் நான் மன்னரை பற்றி பாடல் இயற்றி இருக்கிறேன் படித்து பார் என்று பெருமை பொங்க கூறினானாம்.
அதை படித்து பார்த்த அவன் என்னடா இது பாடல் கண்ணா பின்னா வென்று இருக்கிறது, மன்னரை பற்றி ஒண்ணுமே எழுதலையே என்றானாம், உடனே ”கண்ணா பின்னா தென்னா சோழங்க பெருமானே” என்று தனது பாடலை எழுதி முடித்துவிட்டானாம்.
அரச சபையில் சென்று தான் எழுதிய பாடலை சபையில் உள்ள அனைவருக்கும் கேட்கும்படி சத்தம்போட்டு பாடிகாட்டினானாம் உடனே சபையில் உள்ளவர்கள் எல்லோரும் விழுந்து விழுந்து கேலியாக சிரித்தார்களாம்.
“மண்ணுண்ணி மாப்பிள்ளையே காவிறையே,
கூவிறையே உங்களப்பன்
கோ வில்பெருச் சாளி,
கன்னா பின்னா மன்னா
தென்னா சோழங்கப் பெருமானே.!”
அடக்க மாட்டாமல் அவையினர் சிரித்து உருண்டார்கள் கம்பர் நிதானமாக எழுந்தார். “அருமையான பாடல் இது. இதன் ஆழம் புரியாமல் நீங்கள் ஏளனம் செய்கிறீர்கள். மண்ணுண்ணி என்பது திருமாலைக் குறிக்கும். மா என்பது திருமகளைக் குறிக்கும். இவர்களின் பிள்ளை மன்மதன். நம் அரசரை இந்தப் புலவர், மன்மதனே என்கிறார். கா என்றால் வானுலகம். காவிறையே என்றால் வானுலகை ஆளும் இந்திரனே என்று பொருள். கூ என்றால் மண்ணுலகம். கூவிறையே என்றால் மண்ணுலகை ஆள்பவனே என்று பொருள். விண்ணும் மண்ணும் நம் அரசரின் ஆட்சியில் என்கிறார் புலவர். உங்களப்பன் கோ-வில்லில் பெரிசு-ஆளி என்று பிரிக்க வேண்டும். நம் மன்னனின் தந்தையார் வில்லில் ஆளிபோல் வல்லவர். தந்தையின் தனித்தன்மையை சொல்வதன் மூலம் மகன் அவரினும் வலியவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார் புலவர். கன்னா-கர்ணனே,பின்னா-தருமனே, மன்னா, மன்னவனே தென்னா சோழங்கப் பெருமானே-தென்னாட்டின் அங்கமாகிய சோழ மன்னனே என்று பொருள் சொன்னாராம் கம்பர்.