சென்னை; மத்திய பா.ஜ.க.அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக செப்டம்பர் 27-ல் நடைபெறும் பாரத் பந்த், தமிழகத்தில் முழுமையாக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ, சி.பி.எம்., சி.பி.ஐ (எம்.எல்.) ஆகிய கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சி.பி.ஐ (எம்.எல்) செயலாளர் என்.கே.நடராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒன்றிய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சார திருத்த மசோதாவை எதிர்த்தும் தலைநகர் புதுதில்லியில் 11 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட களத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் விவசாயிகளுக்கு விரோதமான இச்சட்டங்களை திரும்ப பெற வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோல் கேரளம், புதுச்சேரி சட்டப் பேரவையிலும் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.