திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது.
தேவர்கள், தங்களைத் தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழபகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழபகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்குக் கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், “செயந்திநாதர்’ என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே “செந்தில்நாதர்’ என மருவியது. தலமும் “திருஜெயந்திபுரம்’ (ஜெயந்தி – வெற்றி) என அழைக்கப்பெற்று, “திருச்செந்தூர்’ என மருவியது.