Spread the love

பிறக்கும்போதே சிவ சிவ என சொல்லிக் கொண்டே பிறந்ததால் சிவ வாக்கியர் எனப் பெயர் பெற்றார். இளம் வயதில் குருவை நாடி வேதங்களைப் பயின்றார். காசியைப் பற்றி கேள்விப்பட்டு காசிக்குச்சென்று அங்கு செருப்பு தைக்கும் தொழில் செய்த சித்தர் ஒருவரைச் சந்தித்தார். அவரைச் சோதிக்க நினைத்த சித்தர், சிவவாக்கியா செருப்பு தொழிலில் செய்த காசு என்னிடம் உள்ளது. அதை என் தங்கையான கங்கா தேவியிடம் கொடு, அப்படியே கசப்பான இந்த பேய்ச் சுரைக்காயின் கசப்பையும் கழுவிக்கொண்டுவா என்றார்.
கங்கையில் இறங்கி நீரில் கை வைத்ததும் கங்கையிலிருந்து வளையல் அணிந்த மென்மையான ஒரு கை வெளியில் வந்து அவரிடம் கையை நீட்டியது, சிவ வாக்கியர் தாம் கொண்டு சென்ற காசுகளை அந்தக் கையில் வைக்க அந்தக் கை நீரில் மறைந்தது. அதைக் கண்ட சிவவாக்கியர் சிறுதும் ஆச்சரியப்படாமல் தான் கொண்டு சென்ற பேய்ச் சுரைக்காயை அலம்பி சித்தரிடம் வந்து கொடுத்தார். சித்தர் அவரை மீண்டும் சோதிக்க நினைத்து சிவவாக்கியா, இந்த தோல் பையிலும் கங்கை தோன்றுவாள் நீ அங்கே கொடுத்த காசைக் கேள் கொடுப்பாள் என்றார். அப்படியே சிவவாக்கியர் கேட்க செருப்பு தொழில் செய்யும் பையிலிருந்து ஒரு கரம் நீண்டு வந்து காசுகளைக் கொடுத்துவிட்டு மறைந்தது. அப்போதும் சிவவாக்கியர் ஆச்சரியப்படாதது கண்டு அவரின் பக்குவநிலையை அறிந்து அவரை தழுவிக்கொண்டார் சித்தர்.
அப்பா சிவவாக்கியா முத்தி சித்திக்கும்வரை நீ இல்லறத்தில் இரு என்று சொல்லி கொஞ்சம் மணலும் பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து இவற்றைச் சமைத்து தரும் பெண்ணை மணந்துகொள் என்றார். அவைகளுடன் குருவிடம் விடைப்பெற்று நரிக்குறவர்கள் கூடாரம் அமைந்தபகுதி பக்கமாகச் சென்றார். கூடாரத்திலிருந்து வந்த கன்னிப்பெண் சிவவாக்கியரைப் பார்த்தாள். உள்ளுணர்வினால் சுவாமி தங்களுக்கு வேண்டியதை தர சித்தமாயிருக்கின்றேன் என்றவளிடம் என்னிடம் இருப்பவைகளை வைத்து சமைத்து தர முடியுமா என்றார். என்ன ஆச்சரியம் மணல் அருமையான சாதமாகவும் பேய்ச் சுரைக்காய் கறி உணவாகவும் சமைந்தது.

சிவ வாக்கியருக்கு பரிவோடு பரிமாறினாள். குருநாதர் குறிப்பிட்ட பெண் இவள்தான் என்று நினைத்து மகிழ்வோடு உணவு உண்டார். காட்டிலிருந்து அப்பெண்ணின் உறவினர்கள் வந்தார்கள். தவம் செய்யும் எனக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடிவந்தேன். உங்கள் குலப்பெண்ணான இவளை நான் மணம் புரிய விரும்புகிறேன் என்றார். சுவாமி நீங்கள் எங்களுடன் தங்க சம்மதித்தால் நாங்கள் பெண் கொடுக்க சம்மதிக்கின்றோம் என்றனர், சிவவாக்கியரும் சம்மதித்து மணம் புரிந்து இல்லறத்தில் இருந்து கொண்டே தவத்திலும் ஈடுபட்டார்.
ஒருநாள் காட்டிற்குள் சென்று ஒரு மூங்கிலை வெட்டினார். வெட்டிய இடத்திலிருந்து தங்கத் துகள்கள் சிதறி ஒழுக ஆரம்பித்தது. சிவவாக்கியர் இறைவா நான் உன்னிடம் முக்தியை அல்லவா கேட்டேன். இப்படி பொருளாசையை உண்டாக்கலாமா என்றார். அங்கு வந்த நரிக்குறவர்களிடம் எமன் வருகிறான் என்று துகள்கள் வருவதைக் காட்ட ஆச்சரியப் பட்டவர்கள் மூட்டைகளில் வாரிக்கட்டிக் கொண்டனர்.

இருட்டிவிடவே அங்கேயே தங்க முடிவு செய்தனர். இருவர் மூட்டைகளைக் காவல் காக்க இருவர் உணவு வாங்கி வர அருகில் உள்ள ஊருக்குச் சென்றனர். உணவு உண்டனர். நிறைய தங்கம் இருக்கின்றது. அவர்கள் இருவரையும் கொன்று விட்டால் நாம் இருவரும் பங்கு போட்டு ஆயுளுக்கும் சந்தோஷமாக வாழலாம் எனத்திட்டமிட்டு வாங்கிய உணவில் இருவருக்கும் விஷம் வைத்தனர். உணவுடன் வந்தவர்களைப் பார்த்ததும் அருகில் இருந்த கிணற்றிலிருந்து நீர் கொண்டு வாருங்கள் என்றனர். நீர் கொண்டுவரச்சென்ற இருவரையும் அவர்கள் போன்றே நினைத்த இவர்கள் அவர்கள் காலைவாரி கிணற்றில் தள்ளி கொலை செய்தனர். பின் விஷம் கொண்ட உணவை சாப்பிட்டு இவர்களும் இறந்தனர். காலையில் வந்த சிவவாக்கியர் நான்கு பிணங்களையும் பார்த்து வருந்தினார்.
ஒருநாள் வான்வீதியில் சென்ற கொங்கணச் சித்தரைப் பார்த்தார். கொங்கணரும் இவரைப் பார்க்க இருவரும் சந்தித்து மகிழ்ந்தனர். நண்பர்களாயினர். அடிக்கடி சந்தித்தார். தங்கம் செய்யும் வித்தையை அறிந்தும் சிவவாக்கியர் மூங்கில் கூடைகளை பின்னும் தொழில் செய்வதை கண்டு வருந்தினார். அவர் இல்லாத சமயத்தில் அவர் மனைவியை சந்தித்து சில பழைய இரும்புகளை தங்கமாக்கி கொடுத்தார். சிவவாக்கியர் வந்ததும் அவர்மனைவி கொங்கணர் வந்ததைக்கூறி தங்கத்தை அவர்முன் கொண்டு வந்து வைத்தார். இதைக் கொண்டுபோய் கிணற்றில் போடு என்றதும் அவர் மனைவி அப்படியே செய்தாள். மனைவியிடம் தங்கத்தின்மேல் ஆசையா என்றார். அவர் சுவாமி தங்களின் மாறாத அன்பு ஒன்றே எனக்குப் போதும் என்றார்.
சிவனடியார்கள் சிலர் சிவவாக்கியரிடம் வந்து தாங்கள் சித்தர்கள் செய்யும் சித்து விளையாட்டைக் கற்று அதன் மூலம் இரும்பை பொன்னாக்கி உலகில் உள்ள வறுமையை ஒழிக்கப் போகிறோம். எனவே எங்களுக்கு சித்தர்களை அறிமுகம் செய்யுங்கள் என்றனர். உங்களின் பொருளாசையை ஒழியுங்கள் நீங்களே தங்கமாக ஆவீர்கள். இதுதான் நல்ல வழி என்று எல்லாரையும் அனுப்பிவைத்தார். தியானத்தில் ஆழ்ந்து இறைவா மக்களுக்கு தூய்மையான எண்ணம் உருவாக நீதான் கருணை காட்டவேண்டும் என்று வேண்டினார்.
தன் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். இவர் பாடல்கள் சிவவாக்கியம் எனப்படும். இவர் ஓர் சமரசஞானி, முதலில் நாத்திகராக இருந்து பின் சைவராக மாறினார். பின் வீர வைணவராக மாறினார். கும்பகோணத்தில் சித்தி அடைந்தார்.
நாடிப்பரிட்சை எனும் நூல் எழுதினார்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *