Spread the love

பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி பகவான் இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு கொண்டு சேர்க்கிறார். நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். அப்படியான ஹோமங்களில் முதன்மையானதுதான் கணபதி ஹோமம்.

தனக்கு மேல் எந்த நாயகரும் இல்லாததாலேயே அவருக்கு வி – நாயகர் அதாவது விநாயகர் என்று பெயர். எனவே அவரே ஆதிநாயகரும் ஆவார். தேவர்களிலிருந்து மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர். அப்படி தொழாது திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட ஈசனின் தேர் அச்சாணியை விநாயகர் உடைத்தார். தேரே ஸ்தம்பித்து நிற்கும்போது ஈசன் விநாயகரை வணங்காது புறப்பட்டுவிட்டதை உணர்ந்தார். எப்பேற்பட்ட தவறு இது என்று விநாயகரின் எதிரே தலைகுனிந்து மண்டியிட்டார். இது ஈசன் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு உலகிற்குச் சொன்ன பாடமாகும்.

கணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறாமல் நேர்ப்பாதையில் செல்லவும், பாதையில் இருக்கும் தடைகள் நீங்கவும் செய்யப்படுவதே கணபதி ஹோமமாகும். அஸ்திவாரத்தை பலமாக்குவதுபோல ஆதி சக்தியின் அருளைப் பெறுவதற்கான முறையே இந்த ஹோமம். கணபதி ஹோமத்தை செய்வதாலேயே மற்றெல்லா ஹோமத்தையும் செய்யும் தகுதியை ஒருவன் பெறுகிறான்.

கணபதி ஹோமத்தில் முதலில் அனுக்ஞை. அதாவது பெரியோர்களின் அனுமதி ஆசிகளைப் பெறுவது. அதாவது குடும்பத்துடன் சேர்த்து எனக்கு எல்லாத் தடையூறுகளும் நீங்குவதின் மூலம் நினைத்துள்ள எண்ணம் சித்தித்துப் பயனடையும் பொருட்டு மகாகணபதி ஹோமம் செய்வதற்கு எனக்கு தகுதி சித்திக்கும்படியாக அனுக்கிரகம் செய்ய பிரார்த்திக்கிறேன் என்று தொடங்குகிறது. இதற்குப் பிறகு வைதிகர்களின் வழிகாட்டுதலின்படி மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். அதில் முதலில் ஹோமத்தைச் செய்பவர்கள் தங்கள் பெயர், மனைவி, பிள்ளைகள், பேரக் குழந்தைகள் எல்லோரின் பெயரையும் பிறந்த நட்சத்திரங்களோடு சொல்லி ஹோமத்தைச் செய்யும் தகுதியை வழங்க அனுமதி பெற வேண்டும்.

அடுத்ததாக சங்கல்பம் அதாவது உறுதிமொழி. இந்த இடத்தில் எங்களுக்காக நடத்தப்படும் இந்த ஹோமத்தின் சகல காரியங்களையும் செய்ய இவர்களை ஆசார்யர்களாக வரித்துக் கொள்கிறேன் என்று ஹோமத்தை நடத்தி வைக்க வந்திருக்கும் அந்தணர்களை வணங்க வேண்டும். சங்கல்பத்தின்போது பகவானின் நாமத்தை ஆத்மப்பூர்வமாக சொல்ல வேண்டும். இதற்குப் பிறகு புண்யாகவாஜனம். சுத்தமான தரையில் பசுஞ் சாணத்தால் மெழுகி நெல்லைப் பரப்பி அதன் மீது வாழை இலை வைத்து அதில் சமமாக அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மையத்தில் தாமரைப்பூவை வரைய வேண்டும். பூவின் நுனியில் தர்ப்பைகளை வைத்து பூரண கும்பத்தை நீர் நிரப்பி அதில் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூவை சேர்க்க வேண்டும். அதன் மீது மாவிலைக் கொத்து, மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும். இதை வைக்கும்போதே அதற்கென்று உள்ள மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

இதையெல்லாம் முடித்த பிறகு ஹோம குண்டம் அமைத்து எல்லா தேவதைகளையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். அதாவது எல்லா தேவதைகளையும் வரவழைத்து உயிரூட்டுவதாகும். இதற்குப் பிறகு மகா கணபதி ஹோமம் ஆரம்பிக்கிறது. அவருக்கான மந்திரங்களைச் சொல்லி பதினாறு வகையான உபசாரங்களை செய்ய வேண்டும். நெய்யை ஹோம அக்னியில் வார்க்க வேண்டும். முதலில் நெய்யினாலும், அஷ்ட திரவியங்களாலும் பிறகு தேங்காய் மூடியில் மூன்று கண்கள் இருக்கும் முடியை முதலில் போட்டு ஹோமம், அருகம்புல்லை இரண்டிரண்டாக நெய்யில் தோய்த்துப் போட்டு ஹோமம் அதைத் தொடர்ந்து நெல்லை விட்டு ஹோமம் என்று செய்யலாம். இதைத்தவிர நூறு, ஆயிரம் என்று பல எண்ணிக்கைகளில் மோதகங்களை செய்ய வேண்டும். பழங்கள், ஆலங்குச்சி, சீந்தில் கொடி என்று பல்வேறு விஷயங்களை ஹோமத்தில் சேர்க்கலாம்.

மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அந்த ஹோம குண்டத்தை யானையின் நான்கு வலிமையான கால்களாக நினைத்துக் கொள்ளுங்கள். கால்களை அசைக்காமல் ஸ்திரமாக நின்று கொண்டு யானை உடலையும், தும்பிக்கையையும், தலையையும், காதுகளையும் அசைப்பதாக பாவனை செய்து கொண்டு அக்னியை பாருங்கள். மந்திரங்களோடு சேர்த்து செய்யப்படும் அக்னியின் அசைவுகள் யானை அசைவது போன்றிருக்கும். மகாகணபதி ஹோமத்தின் மையமே உங்களுக்குள் இருக்கும் மூலாதார சக்தியைத் தூண்டுவதுதான். அசைவற்ற மூலாதாரம் என்கிற கணபதி அசைவிக்கவே இந்த ஹோமம். இல்லையெனில் மனம் தாறுமாறாக அலையும். காற்றில் பறக்கும் தூசு போல இலக்கின்றி என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கும். ஆனால், மூலாதாரம் விழித்துக் கொண்டால் மனம் ஒருமை பெறும். எண்ணங்களில் நேர்த்தியிருக்கும். தைல தாரை போன்று மனம் தெளிவாக அடுத்தடுத்து யோசிக்கும். வெறும் சிந்தனையோடு நில்லாமல் செயல் திறனிலும் உடல் வழியாக உழைக்க வைக்கும். காரணம் மூலாதாரத்தின் பூரணமான சக்தி அதை பிராண சக்தி என்று விதம் விதமாக கூறலாம். அது நம் புத்தி, மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும்.

ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. 

மகாகணபதி ஹோமத்தை வெள்ளிக் கிழமைகளில் சுக்ல பட்ச சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் செய்தல் சிறப்பு.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *