Spread the love

எட்டு வசுக்கள் வேத காலக் கடவுளர்கள். இவர்கள் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிப்பவர்கள். ஒருமுறை இந்த அஷ்ட வசுக்களும் வஷிஷ்டரின் ஆசிரமத்திற்கு தங்களது மனைவியருடன் வந்தனர். அவர்களுக்கு வசிட்டர் தன்னிடம் இருந்த நந்தினி பசுவின் ( நந்தினி என்பது காமதேனு போன்ற ஒரு பசு) பாலைக் கொடுத்தார். மேலும் அந்த பால் நித்திய இளமையை தரவல்லது என்ற விஷயத்தை அஷ்ட வசுக்களுக்கு தெரிவித்தார்.

வசிட்டரின் வீட்டில் இருந்து தனது வீடு வந்த அஷ்ட வசுக்களில் ஒருவரான பிரபாசனின் மனைவி நந்தினி பசுவின் பாலின் சிறப்புகளை தனது சினேகிதியிடம் தெரிவித்தாள். ஆகவே அந்த சினேகிதிக்கு நந்தினி பசுவின் பாலின் மேல் ஆசை வந்தது. அவள் பிரபாசனின் மனைவியிடம் தனக்கும் அந்த பால் வேண்டும் என்று மன்றாடினாள். பிரபாசனின் மனைவி நந்தினி பசுவைக் கவர்ந்து வரவேண்டி பிரபாசனுடன் ஊடல் கொண்டாள். தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய பிரபாசன், சக வசுக்களின் உதவியோடு வசிட்டரின் பசுவைத் திருடினான். ஆகவே தனது பசுவைத் திருடிய பாவத்துக்காக, அவர்கள் மனிதப் பிறவி எடுக்க வேண்டுமெனவும் அந்த எட்டுப் பேரின் தலைவனான பிரபாசன், தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றவே பசுக்களை திருடியதால் அதிககாலம் பெண்சுகமறியாமல் பூமியில் வாழ்வான் என்று வசிட்டர் சாபமிட்டார். அனைவரும் தங்கள் தவறுக்காக மன்னிப்பு வேண்டினர். வசிட்டரும் அவர்களை மன்னித்து எட்டு வசுக்களில் ஏழு பேர் பிறந்த உடன் இறந்துவிடுவார் என்றும் பிரபாசன் மட்டும் அதிக காலம் பெண்சுகமறியா பிரமச்சாரியாக வாழ்ந்து தர்மத்தினை காப்பான் என்றும் மேலும் அவன் பூமியில் வாழும் வரை அவனை வெல்பவர் எவரும் இருக்கமாட்டார் எனவும் தனது சாபத்தினை மாற்றினார். அந்த பிரபாசனே சந்திர வம்சத்தில் சந்தனு மற்றும் கங்கை தம்பதியருக்கு எட்டாவது மகனான தேவ விரதன் பின்னாளில் கங்கையின் மைந்தனென்று அழைக்கப் பட்ட பீஷ்மர் ஆவார்.

மற்ற ஏழு வசுக்களும் பிறந்த உடனேயே கங்கா தேவியால் கொல்லப்பட்டு சாப விமோசனம் பெற்றனர்.

பீஷ்மரை வெல்ல அகிலத்தில் எவரும் இல்லாத பொழுதும், தன் தந்தைக்கு வழங்கிய வாக்குறுதியின்படி அஸ்தினாபுரத்தினை காக்க கௌரவர் பக்கம் நின்று யுத்தம்புரிந்தார், மேலும் தர்மம் பாண்டவர் பக்கம் இருந்ததால் தன் உயிரையும் விட்டுக்கொடுத்து, தர்மத்தை காத்தார்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *