புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் பற்றி அறியும் முன்னர் அவரது படைப்புச் சார்பான வாழ்வை அறிந்து கொள்வது மிக இன்றியமையாதது ஆகும். புதுமைப்பித்தனின் படைப்புகளில் அவரது வாழ்வியல் தாக்கம் அதிகம் வெளிப்பட்டுள்ளது. அவர் தம் வாழ்க்கையில் அனுபவித்த வறுமை, நிராசை, நம்பிக்கை, வறட்சி ஆகியவற்றைத் தம் கதைகளில் அப்படியே பதிவு செய்துள்ளார். அவை சமுதாய விமரிசனமாகக் கதைகளில் வெளிப்படுகின்றன.
1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் சொக்கலிங்கம் பிள்ளைக்கும் பர்வதம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிறந்த ஊர் திருநெல்வேலி. பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் விருத்தாசலம். எட்டு வயதிலேயே தாயை இழந்த விருத்தாசலம் மாற்றாந்தாயின் கொடுமையை அனுபவித்துள்ளார். படிப்பில் ஆர்வம் இல்லாத அவர் மிகுந்த சிரமத்துடன் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
திருநெல்வேலியில் உள்ள இந்துக் கல்லூரியில் பயின்று 1931இல் தம் இருபத்தைந்தாவது வயதில் பி.ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் பொழுது ஆங்கில நாவல்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நாள்தோறும் புதிது புதிதான துப்பறியும் நாவல்களை விரும்பிப் படித்தார். இரவு நெடுநேரம் வரை கண்விழித்துப் படிக்கும் பழக்கம் உள்ள அவர், தாமும் கதை எழுத வேண்டும் என்ற உந்துதலைப் பெற்றார்.
விருத்தாசலத்திற்கு அரசுப் பணி கிடைக்கவில்லை. அக்கால வழக்கப்படி கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், அவரது தந்தை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார். மனைவியின் பெயர் கமலாம்பாள். திருமணத்திற்குப் பின்னரும் புதுமைப்பித்தன் பொறுப்பில்லாமல் இருந்து வந்தார். ஆனால் நூல்களைத் தேடிப் படிப்பதில் இருந்த ஆர்வம் அவருக்குச் சற்றும் குறையவில்லை. வேலை இல்லாததாலும் அதற்கான முயற்சி இல்லாததாலும் தம் தந்தையின் கோபத்திற்கும் மாற்றாந்தாயின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆட்பட்டார். அதனால் மனைவியைப் பிறந்தகத்துக்கு அனுப்பிவிட்டுத் தாம் மட்டும் சென்னை வந்தார்.