Spread the love

ஆண்டின் ஒவ்வொரு மாதங்களும் ஏதோ ஒரு சிறப்புக்களை கொண்டே அமைந்துள்ளன. எல்லா மாதங்களும் இறைவனுக்கு விசேஷமான மாதங்கள் தான். அவற்றுள்ளும் சில மாதங்கள் அதி விஷேட மாதங்களாக உள்ளன.

அவற்றுள் ஆடி மாதம் பல்வேறுபட்ட சிறப்பம்சங்களை கொண்டு உள்ளது. ஆடி மாதத்தின் சிறப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆடி மாதத்தின் சிறப்புகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

1.அம்பாளுக்கு உகந்த மாதம்

அம்பாள் தவம் செய்த மாதம் என்பதால் ஆடி மாத செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், ஞாயிற்று கிழமைகளில் கூழ் ஊற்றப்படும் நிகழ்வும் நடத்தப்படுகின்றன.

2. கிருத்திகை நட்சத்திரம்

மாதம் முழுவதும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானதாகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் (23 ஜூலை) கூடுதல் சிறப்பு கொண்டது. இது முருகனுக்கு உகந்த தினம். முருகனை இந்த நாளில் வழிபாடு செய்வது நல்லது.

3. ஆடி அமாவாசை

ஒவ்வொரு வருடமும் 3 முக்கியமான அமாவாசை வரும். அதில் முதலாவதாக ஆடி அமாவாசை (ஜூலை 28) வருகின்றது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாளாக விளங்குகின்றது. முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பெற்றிடலாம். அன்னதானம் செய்தல் இந்நாளில் முக்கியத்துவம் வாய்ந்த செயல்களாகும்.

4. ஆடி பூரம் (01 ஆகஸ்ட்)

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது.

5.பெண்களது வழிபாட்டுக்கு உகந்த மாதம்

ஆடிப்பெருக்கு (03 ஆகஸ்ட்) தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். இதேபோல் சுமங்கலிப் பெண்கள் வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். ஆடி மாதச் செவ்வாய் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

6. கருட பஞ்சமி

கருடாழ்வார் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆவார். அவரது பிறந்த தினம், “கருட பஞ்சமி” என்ற பெயரில் விரதமிருந்து கொண்டாடப்படுகிறது (02 ஆகஸ்ட்)

7. வியாச பூஜை

ஆடி மாதத்தில் வியாச பூஜை நடத்தபடுகின்றது. வியாசர் குருக்களுக்கு எல்லாம் குருக்களாக போற்றப்படுகின்றார். எனவே இம்மாதத்தில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி அன்று மாணவர்கள் வியாசரை வணங்கினால் கல்வி வளம் அதிகரிக்கும்.

8. துளசி வழிபாடு

ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *