தற்போதைய நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் சோழ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. மாமன்னர் கோச் செங்கட் சோழ நாயனார் ஆட்சி காலத்தில் , தன் நாட்டைக் காக்கும் வகையில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் சிக்கல் நவநீதீீஸ்வரர் கோயிலில் ஒரு முருகன் சிலையை வடிவமைக்கும் படி ஒரு சிற்பிக்கு உத்தரவிட்டார். சிற்பியும் கலைநயமிக்க முருகனை சிலையாக வடிவமைத்துக் கொடுத்தார். மிகுந்த அழகுடன் காணப்பட்ட அந்த முருகன் சிலையைக் கண்ட மன்னர், இதேப் போன்று இன்னொரு சிலையை சிற்பி செய்து விடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டார்.
கட்டை விரல் வெட்டப்பட்ட நிலையில் எட்டுக்குடி கிராமத்திற்குச் சென்ற சிற்பி அங்கு தன் கட்டை விரல் இல்லாமலேயே முருக பெருமானை வேண்டி மீண்டும் ஒரு சிலையை உருவாக்கினார். அச்சிலை மிக உயிர்த்துடிப்புடன் அமைந்து, ஆறுமுகனின் உடலில் உஷ்ணமும் உண்டானது. திடீரென சிலைக்கு உயிர்வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்கத் தொடங்கியது. அப்போது அங்கிருந்த மக்கள் மயிலை, எட்டிப்பிடி எனக் கூச்சலிட, சிற்பி தனது உளியால் மயிலின் நகத்தை காயப்படுத்தவே, மயில் பறப்பது நின்றதாம். பின்னாளில் எட்டிப்பிடி என்ற அந்த வார்த்தையே எட்டுக்குடி என்று மருவியதாக வரலாறு. மிகுந்த அழகுடன் காணப்பட்ட அந்த முருகன் சிலையைக் கண்ட மன்னர், இதேப் போன்று இன்னொரு சிலையை சிற்பி செய்து விடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் கண்களைப் பறித்தார்.
கட்டை விரல் மற்றும் கண்கள் இல்லாத நிலையில் என்கண் கிராமத்திற்குச் சென்ற சிற்பி அங்கு தன் கட்டை விரல் மற்றும் கண்கள் இல்லாமலேயே, தனது பேத்தியின் உதவியுடன் முருக பெருமானை வேண்டி மீண்டும் ஒரு சிலையை உருவாக்கினார். இந்தச் சிலையை செதுக்கும்போது உளி தவறுதலாக சிறுமியின் கைகளில் பட்டு இரத்தம் சிற்பியின் கண்களில் படவே சிற்பி பார்வை பெற்றார். சிற்பி தனது கண்கள் திரும்பக் கிடைக்கப் பெற்றதால் இவ்வூர் என்கண் எனப் பேர் பெற்றது.