கொச்சி: கொச்சியை சேர்ந்த சுரேஷ் பாபு என்பவரிடம் 2018 மாடல் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் உள்ளது. கார் மேனுவலின்படி இந்த கார் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 45 லிட்டர் ஆகும். இவர் சமீபத்தில் கொச்சியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தனது காரில் டேங்க் நிறையும் அளவுக்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார். நிரப்பியபின் பம்ப்பில் உள்ள எரிபொருள் மானியில் 53 லிட்டர் பெட்ரோல் காட்டியபோது, தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார். காரணம்? கார் உற்பத்தி நிறுவனத்தின் விவரக்குறிப்புகளின்படி, போலோவின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 45 லிட்டர் மட்டுமே.
பெட்ரோல் பம்பில் உள்ள எரிபொருள் வழங்கும் இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாகவும், அதில் ஏழெட்டு லிட்டர் பெட்ரோல் அதிகமாக மீட்டர் ரீடிங் வருமாறு செட்டிங் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகப்பட்ட தீபேஷ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து ஐஓசி நிறுவனத்தின் நற்பெயரைத் தக்கவைக்க ஆர்வமாக இருந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பம்ப் உரிமையாளர்களால் ஒரு அசாதாரண பரிசோதனை நடத்தப்பட்டது
பரிசோதனை
IOC அதிகாரிகள் தங்கள் பிராண்ட் பெயரைப் பாதுகாக்க விரும்பினர். ஆகவே, தீபேஷ், பம்ப் மேலாளர் ஷாலு மற்றும் ஐஓசி அதிகாரி டால்பின் கிறிஸ்டோபர் ஆகியோர் போலோவுடன் ஒரு வாகனப் பணிமனைக்கு வந்தனர். டேங்கில் இருந்த பெட்ரோல் முழுவதும் வெளியேற்றப்பட்டு, சட்ட அளவியல் துறை சான்றளிக்கப்பட்ட ஐந்து லிட்டர் கேன் மூலம் காரில் பெட்ரோல் நிரப்ப ஆரம்பித்தனர். தீபேஷ் காரில் இருந்த எரிபொருள் டேங்க் 57.83 லிட்டராக நிரம்பியதில் ‘சோதனை’ முடிந்தது! எந்த மோசடியும் நடக்கவில்லை என்பதை உணர்ந்த தீபேஷ், ஐஓசி பிரதிநிதி மற்றும் பம்ப் மேலாளர் ஆகியோர் கைகுலுக்கி மனதாரப் பிரிந்தனர்.
வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்
ஆட்டோமொபைல் நிபுணர்களின் கூற்றுப்படி, உற்பத்தியாளர்கள் குறிப்பிடும் திறனை விட ஆறு முதல் ஏழு லிட்டர் கூடுதல் எரிபொருள் பெரும்பாலான கார்களில் நிரப்பப்படலாம். (தீபேஷ் விஷயத்தில், இது 12.83 லிட்டர்). இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, கார் நிறுவனங்கள் பரிந்துரைக்கும் கட்-ஆஃப் வரை மட்டுமே எரிபொருள் தொட்டிகளை நிரப்ப வேண்டும்.
“வழக்கமாக, முழு தொட்டியை நிரப்பும் போது, முனையிலுள்ள சென்சார் கட்-ஆஃப் பகுதியைப் பெட்ரோல் தொட்டதும் பெட்ரோல் பம்ப் மோட்டர் இயக்க ஓட்டத்தை நிறுத்துகிறது. கட்-ஆஃப் ஆனாலும் கூட, எரிபொருள் டேங்கில் மேலும் மூன்று அல்லது நான்கு லிட்டர் இடமளிக்க முடியும். ஆனால் கட்-ஆஃப் மட்டத்தைவிட அதிகமாக நிரப்புவதை தவிர்ப்பது நல்லது” என்று ஆட்டோமொபைல் நிபுணர் சங்கரன்குட்டி நாயர் கூறினார். இதற்கிடையில், இந்த போலோ மாடலில் 45 லிட்டருக்கு மேல் பெட்ரோல் நிரப்புவது பாதுகாப்பற்றது என்று கொச்சியில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்தனர். குறிப்பிட்ட தொட்டி கொள்ளளவிற்கு மேல் எரிபொருள் நிரப்பினால் அசம்பாவிதம் ஏற்படும் என எச்சரித்தனர்.