Spread the love

பிரகஸ்பதி திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தார். அவரது மனைவியின் பெயர் தாரா. பிரகஸ்பதி ‘வியாழன்’ கோளின் பிரதிநிதியாக இருந்தார். ‘தாரா’ என்பதற்கு நட்சத்திரம் என்று பொருள். பழங்கால இந்தியாவில், எல்லா சடங்குகளிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான இடம் இருந்தது.

தனது மனைவியின் துணையின்றி ஒரு ஆணால் தனித்து எந்த சடங்கும் செய்ய முடியாது என்ற இந்த ஏற்பாடு, உடல்ரீதியாக வெளிசூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், சமூகத்தில் பெண்களுக்கு சமஉரிமை இருப்பதை உறுதிசெய்தது. தன் மனைவியின் துணையில்லாமல் ஆணால் ஆசிர்வாதம்கூட பெறமுடியாது என்ற நிலை இருந்தது. மனைவி இல்லாமல் சொர்க்கத்திற்கும் போக முடியாது, மனைவி இல்லாமல் முக்திக்கும் வழியில்லை. எல்லா சடங்குகளும், எந்தவகையிலும் பெண்ணை தவிர்த்துவிட்டு நடத்த முடியாதவாறு சமூகத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

தேவர்களின் ஆஸ்தானத்தில் இருந்தாலும், தான் செய்யும் அனைத்திற்கும் தாராவின் துணை பிரகஸ்பதிக்கு அவசியமாக இருந்தது. தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே தாராவுடன் ஒட்டிக்கொண்டு இருந்த பிரகஸ்பதியின் இயல்பில் மலருக்கு மலர் தாவும் குணம் இருந்தது. இதை கவனித்துவந்த தாரா, ஒருநாள் வானில் மிதந்த முழுநிலவை பார்த்து அதன் தலைவனான சந்திரன் மீது காதல் வயப்பட்டார்.

சந்திரனும் தாராவைக் காண நேரில் பூமிக்கு வந்தார். காதலில் இருந்த தாரா, சில நாட்களில் பிரகஸ்பதியை பிரிந்து சந்திரனுடன் வெளியேறினார். இதனால் பிரகஸ்பதி கடும் கோபமடைந்தார். தனது மனைவியை மட்டும் பிரகஸ்பதி இழக்கவில்லை, அவரது தலைமை பதவி, அவரது கௌரவம், சமூகத்தில் இருந்த மதிப்பு, இதனுடன் தேவலோகத்தில் நுழைய முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால், இந்திரனை அழைத்து “என் மனைவியை மீண்டும் என்னிடம் அழைத்து வரவேண்டும், இல்லையென்றால் என்னால் தொடர்ந்து உங்களுக்காக சடங்குகளை நடத்த முடியாது,” என பிரகஸ்பதி கூறினார். தன் நலனுக்காக தாராவை மீண்டும் பிரகஸ்பதியுடன் சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தினார் இந்திரன்.

ஒரு குடும்ப அமைப்பிற்குள் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று ஒருவரை கட்டாயப்படுத்துவது முதன்முறையாக நிகழ்ந்தது. “திரும்பி வந்தே தீரவேண்டும்” என்ற இந்திரனுக்கு, தாராவிடமிருந்து “என் காதல் அதற்கு மேல் இருக்கிறது” என்பதே பதிலாக கிடைத்தது. இந்திரன் “உன் உணர்ச்சிகளுக்கு இங்கே இடமில்லை. நீ பிரகஸ்பதியுடன் சேர்ந்து வாழ்வதே தர்மம். நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே எனது சடங்குகள் தொடர்ந்து நடக்கும்,” என்று தாராவை மீண்டும் பிரகஸ்பதியுடன் சேர்த்து வைத்தார்.

தாரா தாய்மை அடைந்தார். இது யாருடைய குழந்தை என்பதை அறிய விரும்பினார் பிரகஸ்பதி. தாரா பதில்பேச மறுத்தார். மக்கள் மெல்ல குழுமினார்கள். அப்போதும் தாரா பதில் பேசவில்லை. அப்போது, “உண்மையில் நான் யாருடைய குழந்தை?” என்று இன்னும் பிறக்காத அந்த குழந்தை கருவறையில் இருந்து கேள்வி எழுப்பியது. கருவாக இருக்கும் போதே தன் மூலத்தை அறிந்துகொள்ள விரும்பும் குழந்தையின் புத்திசாலித்தனத்தை மெச்சிய மக்கள், தாராவிடம், “உன் கணவனிடம் நீ சொல்ல மறுக்கலாம், அந்த கடவுளிடம் சொல்ல மறுக்கலாம், ஆனால் இன்னும் பிறக்காத உன் குழந்தையின் கேள்விக்கு நீ பதில் சொல்ல மறுக்கமுடியாது,” என்றார்கள். “இது சந்திரனின் குழந்தை,” என்றார் தாரா.

அந்த குழந்தைதான் புதன் கிரகம். “

By Manager

One thought on “தேவ குரு பிரகஸ்பதி அவரது மனைவி தாரா மற்றும் தாராவின் குழந்தை புதன் ஜனித்த கதை .”
  1. Im very pleased to find this site. I need to to thank you for ones time for this particularly fantastic read!! I definitely really liked every part of it and I have you bookmarked to see new information on your site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *