திருச்செந்தூர் கோயிலைக் கைப்பற்றி, அங்குள்ள சிலைகளை டச்சுக்காரர்கள் எடுத்துச் சென்றனர். அதைக் கொடுத்துவிடுமாறு அப்போது தென் தமிழகத்தை ஆண்ட திருமலை நாயக்கர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு டச்சுப் படைகள் ஒரு லட்சம் ரியால்கள் பிணயத் தொகை கேட்டுள்ளனர்.
அறுபடை வீடுகளில் ஒரு கோயிலான திருச்செந்தூர் முருகன் கோயிலின் மூலவர் சிலையை சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுப் படையினர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். டச்சுப் படையினரால் கொள்ளையடிக்கப்பட்ட அந்த சிலை மீண்டும் கோயிலை எப்படி வந்தது கொள்ளையடித்த டச்சு படையினர் என்ன ஆனார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் தமிழகத்தை ஆண்டு வந்த மன்னர் திருமலை நாயக்கருக்கும் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும் பகை இருந்தது. இந்த பகை போர்த்துக்கீசியரின் தலையீடு மற்றும் திருமலை நாயக்கருக்கு போர்த்துக்கீசியரின் ஆயுத உதவி ஆகிய காரணங்களால் முடிவுக்கு வந்தது. போர்த்துக்கீசியரிடம் பெற்ற ஆயுதங்களுக்குப் ஈடாக காயல்பட்டினம் பகுதியில் போர்த்துக்கீசியர் தங்கி வியாபாரம் செய்யவும் கிறிஸ்தவ தேவாலயம் கட்டவும் போர்த்துக்கீசியருக்கு திருமலை நாயக்கரால் அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் 1648-ம் ஆண்டு டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கு திருச்செந்தூரில் தங்கி வியாபாரம் செய்ய மன்னர் அனுமதி வழங்கினார்.
தொழில் போட்டியால் கி.பி.1649 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்ச்சுக்கீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் திருச்செந்தூர் கடற்கரையில் சண்டை நடந்தது. டச்சுப் படையின் படகைப் பொருட்களுடன் கைப்பற்றி, அதைப் போர்த்துகீசியர் அழித்தனர். டச்சுப் படை அப்போது மலபார், கொழும்பு போன்ற இடங்களில் கோட்டைகள் கட்டி, வலுவான படைகளுடன் இருந்தது. அவர்கள் கொழும்பில் உள்ள தங்கள் தலைமையகத்திற்கு உதவி கேட்டனர். தலைமையகம் காயல்பட்டணத்தில் இருந்த டச்சுப் படைகளுக்காக 10 படகுகளில் படைகளை அனுப்பிவைத்தது. அந்தப் படகுகள் மணப்பாடு அருகே தரையிறங்கியது. அவர்கள் வீரராமபட்டணத்தில் இருந்த போர்த்துகீசியர்களின் தேவாலயத்தைக் கைப்பற்றினர். மேலும் அந்தப் படைகள் முன்னேறி திருச்செந்தூர் முருகன் கோயிலையும் துப்பாக்கி முனையில் கைப்பற்றியது. 20-2-1649ஆம் நாள் திருச்செந்தூர் கோயிலை கைப்பற்றிய டச்சுக்காரர்கள் தங்கள் பாசறையை அங்கே அமைத்தனர்.
22-2-1649ஆம் நாள் திருமலை நாயக்கரின் பிரதிநிதி டச்சுக்காரர்களிடம் கோயிலில் அமைந்திருக்கும் பாசறையை உடனே காலி செய்யும்படி வேண்டுதல் விடுத்தார். அதை டச்சுக்காரர்கள் ஏற்காமல் கோவிலை காலி செய்ய மறுத்தனர்.
டச்சுக்காரர்கள் கோயிலில் இருந்து பாசறையைக் காலி செய்ய மறுத்ததால் ஊரிலுள்ள மக்கள் சிறு படைகளை திரட்டி, திருமலைநாயக்கர் படையினரும் சேர்ந்து 25-2-1649 ஆம் நாள் டச்சுக்காரர்களுடன் போரிட்டனர். அந்த போரில் டச்சுக்காரர்களில் சிலர் மாண்டனர்.
திருமலை நாயக்கரிடம் டச்சு கவர்னர் 1-3-1649ல் மாண்டவர்களுக்காக நஷ்ட ஈடு ஒரு இலட்சம் ரியால் கேட்டார். அதற்கு உரிய பதில் வராததால் கோயிலிலுள்ள சண்முகர், நடராஜர் ஐம்பொன் சிலைகளைத் தங்கம் என்று கருதி கப்பலில் தங்கள் நாட்டிற்கு கொள்ளையடித்து சென்றனர் .கப்பலில் செல்லும் வழியிலேயே சிலைகளை உருக்க முயற்சித்தனர்.
சிலைகளைக் கப்பலில் ஏற்றிச் செல்லும் போது சண்முகரின் சக்தியால், பெரும் மழையும் புயலும் வந்து, கப்பலே கடலில் கவிழ்ந்து விடும் நிலை வர, டச்சுக்காரர்கள் சண்முகரின் சக்தியை அறிந்து, சிலைகளைக் கப்பலில் வைத்திருந்தால் எல்லோருடைய உயிருக்கும் ஆபத்து வந்துவிடும் என்று எண்ணி சண்முகரையும் நடராஜரையும் கடலுக்குள் போட்டு விடுகின்றனர். சண்முகர் நடராஜர் சிலைகளைக் கடலில் போட்ட உடனே மழையும் புயலும் நின்றது ,டச்சுக்காரர்கள் கப்பலும் தப்பியது. சண்முகரின் சக்தியை அறிந்த டச்சுக்காரர்கள், சண்முகருக்கு வணக்கம் செய்து விட்டுத் தங்கள் நாடு சென்றனர். சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சில வருடங்களுக்குப் பின் ஒரு நாள் இரவு திருமலை நாயக்கரின் பிரதிநிதி வடமலையப்ப பிள்ளை கனவில் சண்முகர் காட்சி தந்து, தான் கடலுக்குள் இருப்பதாகவும், கடலில் தான் இருக்கும் இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் மிதப்பதாகவும், கருடன் ஒன்று வட்டமிட்டு கொண்டு இருப்பதாகவும் கூறுகிறார்.
வடமலையப்பர் உள்ளூர் மக்கள் சிலருடன் படகில் கடலுக்கு செல்கிறார். அங்கே கடலில் எழுமிச்சை பழம் மிதப்பதையும், கருடன் வட்டமிடுவதையும் கண்டு, அந்த இடத்தின் கீழ் தான் சண்முகர் இருப்பதாக எண்ணி அங்கே குதித்து தேட சொல்கிறார். கடலுக்குள் குதித்தவர்கள் சண்முகர்,நடராஜர் சிலைகளை கண்டுப்பிடித்து,கடலில் இருந்து மேலே கொண்டு வந்து படகில் ஏற்றி சென்றனர். பலகாலம் கடலுக்குள் சண்முகர் சிலை இருந்தபடியால்,உப்பு தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு சண்முகர் உருவில் சில இடங்களில் சேதமடைந்திருப்பதை இன்றும் காணலாம். கிபி 1653 ஆண்டில் சண்முகர் சிலையையும், நடராஜர் சிலையையும் கோவிலுக்குள் கொண்டுவந்து மூலஸ்தானத்தில் சேர்த்து குடமுழுக்கு செய்யப்பட்டது.