Spread the love

பால காண்டம்


பாயிரம்


கடவுள் வாழ்த்து


உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1

சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2

ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன – மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். 3

அவையடக்கம்


ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் – எனை!
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே. 5

வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது எனின்,-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே. 6

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ. 7

முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்:-
‘பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும்,
பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?’ 8

அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
தறைவில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ? 9

நூல் வழி


தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ. 10

இடம்


நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே. 11

By Manager

One thought on “கம்பராமாயணம்- பாலகாண்டம்- கடவுள் வாழ்த்து, Kambaramayanam, Balakandam, Kadavul Vaazhthu”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *