தமிழர் சமயம் என்பது சைவமும் மாலியமும் (வைணவமும்) என்கிறார் சீமான். இந்துக்கள் என்பது சட்டத்தின் அடிப்படையிலானது மட்டும். ஆகையால் இந்துக்கள் என்பவர்கள் அனைவரும் சைவத்துக்கும் வைணவத்துக்கும் திரும்ப வேண்டும் என்பது சீமான் பேச்சு.
சீமானின் இந்த பேச்சு கடும் விவாதங்களை உருவாக்கி உள்ளது. இந்த பின்புலத்தில் தமிழர் சமயம், வழிபாடு தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் கூறியிருக்கிற கருத்துகளின் தொகுப்பு இது:
தமிழர் மதம் தொடர்பான பல்வேறு அறிஞர்களின் கருத்துகளின் தொகுப்பு:
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே
(தொல்காப்பியம் பொருளதிகாரம்)
‘தமிழர் மதம்’ என்னும் நூலில் பாவாணர் எழுதி இருப்பதாவ்து:
குறிஞ்சி நில மக்கள் தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு, சேந்தன் (சிவந்தவன்) என்று பெயரிட்டு வணங்கினர். சேயோன், சேய் என்பன இலக்கிய வழக்கு. முல்லை நிலத்தில் ஆடுமாடுகட்குப் புல் வளரவும், ஆயருணவிற்கு வானவாரிப் பயிர்கள் விளையவும், மழை வேண்டியதாயிற்று. மழை கரிய முகிலினின்று விழுவதால், முகிலையே தெய்வமாகக் கொண்டு மால் எனப் பெயரிட்டனர். மால்-மா-மாயோன்.
மருதநில மக்கள் வேளாண் மாந்தர். இல்லறத்தைச் சிறப்பாய் நடத்தும் பண்பால் அவர்கள் மறுமை யில் தேவர் ஆவர். தேவருக்கெல்லாம் கோன் தேவர் வேந்தன். இது கருதியே ‘வேந்தன் மேய தீம்புனல் உலகமும்’ என்றது தொல்காப்பியம்.