பிரதோஷம் என்றால் என்ன? அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மகாலட்சுமி , ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் மணந்து கொண்டார். இதரவற்றை தேவர்கள் எடுத்துக் கொண்டனர்.
ஆனால் கூடவே ஆலகால விஷமும் வந்தது. இதைக்கண்டு அனைவரும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற சிவபெருமான் அந்த விஷத்தை உண்டார். அதனைக்கண்ட பார்வதி தேவி தன் கரங்களால் அவரது தொண்டையைத் தொட விஷம் சிவனின் தொண்டைக் குழியிலேயே நின்றுவிட்டது. பரமசிவன் மேனி நீலமாக மாறி நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின் மற்றும் பௌர்ணமிக்குப்பின் வரும் 13-ம் நாள் பிரதோஷ நாள் ஆகும். இந்த இரண்டு பிரதோஷ நாட்களிலும் சூரிய அஸ்தமனத்திற்கு இரண்டு மணி நேரம் முன் மற்றும் பின் வருகின்ற காலம் பிரதோஷ காலம் ஆகும்.
இந்த நேரத்தில் ஆலயம் சென்று வழிபடுவோர்க்கு சிவன் எல்லா நன்மைகளும் வழங்குவார். திருச்சிற்றம்பலம்.