மதுரை சொக்கநாதருக்கு பூஜைகள் செய்துவந்த ஆதி சைவர் மரபில் தோன்றிய தருமி, சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவன். அவனுக்கு தாய், தந்தை, மனைவி என நெருங்கிய உறவினர் எவரும் இல்லை. அக்காலத்தில் சொக்கநாதரைத் தொட்டு அபிஷேக ஆராதனை திருமணம் ஆன ஆதிசைவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நியதி இருந்தது. ஆகவே திருமணம் செய்து கொள்ள ஆசை கொண்டான் தருமி. ஆனால் அக்கால மரபுப்படி மணமகன் தட்சணை பெண்வீட்டாருக்கு தரவேண்டி இருந்தது. ஆனால் அதற்கு வேண்டிய பணம் அவனிடம் இல்லை.
அந்த காலகட்டத்தில் செண்பகப் பாண்டியன் பாண்டியநாட்டை ஆட்சி செய்து வந்தான். ஒருநாள் செண்பகப் பாண்டியன் தன்னுடைய மனைவியுடன் நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்போது நறுமணம் வருதை உணர்ந்தான். அந்த மணம் தன் மனைவியின் கூந்தலில் இருந்து வருவதாகக் கருதிய மன்னனுக்கு பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டா? அல்லது பூக்கள் மற்றும் நறுமணப் பொருட்களை பூசிக்கொள்வதால் மணம் உண்டாகிறதா? என்ற சந்தேகம் எழுந்தது. தன்னுடைய சந்தேகத்தை பாடல்கள் மூலம் தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழி பரிசளிக்கப்படும் என அறிவித்து பொற்கிழியை சங்கமண்டபத்தின் முன்னர் கட்டித் தொங்கவிட்டான்.
இதனை அறிந்த தருமி, சொக்கநாதர் முன்னர் சென்று “அப்பனே, பாண்டியன் தன்னுடைய சந்தேகத்தைப் போக்கும் பாடலை அளிப்போருக்கு ஆயிரம் பொற்காசுகளை பரிசாக அறிவித்து உள்ளான். எனக்கோ பாடல் ஏதும் எழுதத் தெரியாது. ஆனால் ஆயிரம் பொன் கிடைத்தால் நான் திருமணம் செய்து கொண்டு உன்னைத் தொட்டு அபிஷேக ஆராதனை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும். ஆகையால் எனக்கு ஆயிரம் பொற்காசுகளை கிடைக்க அருளவேண்டும்” என்று மனமுருகி வேண்டினான்.
அப்போது சொக்கநாதர், இறைவனார் என்ற பெயரில் புலவரின் வடிவத்தில் வந்து பாண்டியனின் சந்தேகத்தைப் போக்கும் பாடலை தருமிக்கு அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட தருமி நேரே செண்பகப் பாண்டியனைச் சந்தித்து அரசனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினான். பாண்டியனும் அப்பாடலை வாசிக்கச் சொன்னான்.
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமஞ்செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியிற்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே”
என்று தருமி இறைவன் அளித்த பாடலை வாசித்தான்.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பதாக அமைந்த பாடலின் உட்கருத்தை அறிந்த செண்பகப் பாண்டியன் மகிழ்ச்சி அடைந்து தருமிக்கு பரிசளிக்க உத்தரவிட்டான்.
சங்கமண்டத்திற்கு முன்னே கட்டியிருந்த பொற்கிழியை தருமி எடுக்கச் செல்கையில் நக்கீரர் பொற்கிழியை எடுக்க விடாமல் தடுத்தார்.
அங்கே வந்த செண்பகப் பாண்டியனிடம் “இப்பாடலில் சொல் குற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் பொருள் குற்றம் உள்ளது. இதற்கு தாங்கள் பரிசளிப்பது தவறு” என்று கூறி தருமியிடம் பாடலைத் திருப்பிக் கொடுத்தார். தருமி நேரே சொக்கநாதரின் சந்ததிக்குச் சென்று புலம்பினான். அப்போது மீண்டும் புலவர் வடிவில் தோன்றிய சொக்கநாதர் தருமியிடம் நடந்தவற்றைக் கேட்டறிந்து நேரே சங்கமண்டபத்துக்குச் சென்றார்.
அங்கிருந்தோரிடம் “யார் என்னுடைய பாட்டில் குற்றம் இருப்பதாகச் சொன்னது” என்று சிங்கம்போல் கர்ஜித்தார். அப்போது நக்கீரர் “உங்களுடைய பாட்டில் சொல் குற்றம் இல்லை. பொருளில்தான் குற்றம் உள்ளது.” என்றார்.
அதாவது பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பதானே உங்கள் பாடலின் கருத்து. அதுதான் குற்றம்.
பெண்கள் நறுமலர்கள் மற்றும் திரவியங்களைப் பூசிக்கொள்ளுதல் போன்ற செயல்களால்தான் அவர்களின் கூந்தலுக்கு மணம் உணடாகிறது. இயற்கையில் அவர்களின் கூந்தலுக்கு மணம் இல்லை என்று கூறினார் நக்கீரர். இறையனார் பல்வேறு விளக்குகளுடன் பலமாக வாதிட்டார். ஆனால் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் இல்லை, ஆகவே இறையனாரின் பாடல் பொருள் குற்றம் மிக்கது என வாதிட்டார் நக்கீரர்.
இறுதியில் இறைவனார் தன்னுடைய நெற்றிக்கண்ணினை திறந்து காட்டினார். வந்திருப்பது இறைவனார் என்று தெரிந்தும் நக்கீரர் “நீர் இந்திரன் போல் உடல் முழுவதும் கண்களாக்கிச் சுட்டாலும் உம்பாடல் குற்றமுடையதே” என்று கூறினார். உடனே இறைவனாரின் நெற்றிக்கண்ணிலிருந்து வந்த தீப்பொறியானது நக்கீரரைச் சுட்டது. நக்கீரர் வெப்பம் தாளாமல் பொற்றாமரைக் குளத்தில் அழுந்தினார். சொக்கநாதர் அவ்விடத்தைவிட்டு மறைந்து அருளினார்.
பின்னர், வந்திருப்பது சொக்கநாதர் என்பதை அறிந்த மன்னன் அகமகிழ்ந்தான். மேலும் தான் அறிவித்த ஆயிரம் பொற்காசுகளை தருமிக்கே அளித்தான். அதனைப் பெற்ற தருமி, பின்பு திருமணம் செய்து பல காலம் சிவத் தொண்டு புரிந்தான்.
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து இரண்டாவது படலமாக அமைந்துள்ளது.
கற்றைவார் சடையார் நெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்டப்
பற்றுவான் இன்னும் அஞ்சான் உம்பரார் பதிபோல் ஆகம்
முற்றுநீர் கண்ணானாலும் மொழிந்த உம்பாடல் குற்றம்
குற்றமே என்றான் தன்பால் ஆகியகுற்றம் தேரான்.
இறைவனாக இருந்தாலும் குற்றம் குற்றமே என்று நக்கீரர் கூறியதிலிருந்து உயர்பதவிகள் வகிப்பவர்கள் யாருக்காகவும், எந்த சூழ்நிலையிலும் நடுநிலை மாறக் கூடாது என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.