அனுமான் பீம் சிங் என்ற இந்தியர் ஆங்கிலேயர்களால் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டார். அவரால் சிங்கப்பூரில் 1870 ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஆலயம், அருள்மிகு கிருஷ்ணன் ஆலயம் ஆகும். அக்காலத்தில், இப்பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள், மாலைப் பொழுதில் ஒன்று கூடும் பொழுதுபோக்கு இடமாக வாட்டர்லோ சாலை அமைந்திருந்தது. முதலில் அப்பகுதியில் இருந்த ஒரு ஆலமரத்தின் கீழ் அனுமன், விநாயகர் தெய்வங்களை வைத்து விளக்கேற்றித் தினந்தோறும் பூஜை செய்து வழிபாட்டைத் துவங்கினர். சில காலத்திற்குப் பின் கிருஷ்ணனையும் வைத்து வழிப்படத் தொடங்கினர். ஆரம்பத்தில், இக்கோயில் சிறிய குடிலாக இருந்தபோதிலும் பக்தர் கூட்டம் அதிகரிக்கவே,பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கோவில் பெரிதாக இருக்கவேண்டும் என எண்ணி, 1880ம் ஆண்டில் அனுமான் பீம் சிங், கிருஷ்ணன் கோயில் நிர்வாகத்தினைத் தன் மகன் உம்நா சோம்பாவிடம் ஒப்படைத்தார். சோம்பாவின் முயற்சியால் -1880-1904 ஆண்டுகளில் கிருஷ்ணன் கோவில் கற்கட்டிடமாக மாறியது. பின்னர், 1984 ம் ஆண்டு தற்போதைய தேவைக்கேற்ப கோவில் புதுப்பிக்கப்பட்டு, கோயில் நுழைவாசல்,கோபுரம் ஆகியனவும் புதுப்பிக்கப்பட்டது. புதிய சன்னதிகளில் ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை, குருவாயூரப்பன், சுதர்சனர், மகாலட்சுமி சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டன.
கிருஷ்ணன் கோவிலை அடுத்து சீனக் கோயிலும் அமைந்துள்ளதால் சீனப் பக்தர்களும் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து கிருஷ்ணனின் தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். அதுபோல இந்து பக்தர்களும் சீன கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். சீன- இந்து பக்தர்களின் கூட்டு வழிபாட்டு தலமாக திகழ்கிறது.