கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னன் திறை கொடாமலிருந்த பிழையின் காரணமாக முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். இது செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இவர் தீபங்குடியைச் சேர்ந்த அருகர் ஆவார். இந்நூலின் காப்புச் செய்யுளால் இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என அறியலாம்.
பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் “கலிங்கத்துப் பரணி” என அழைக்கப்படுவதாயிற்று.தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி நூல் கலிங்கத்துப் பரணியே ஆகும். இதுவே பிற்காலப் பரணி நூல்களுக்கு வழிகாட்டியாய் அமைந்த நூலாகும். இது கலித் தாழிசையாற் பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது. காலம் (1078- 1118-குலோத்துங்க சோழன் காலம்) பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி. சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி எனப் புகழ்ந்துள்ளார்.
பரணி என்பது போரில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாடும் சிற்றிலக்கிய வகை ஆகும். போரிலிருந்து மீண்ட தலைமகன் பால் புலவியுற்ற தலைமகளது ஊடலைத் தீர்க்க புலவர்கள் வாயிலாவதும், புலவியாற்றிய பின்னர், தலைவன் சென்ற காட்டின் கொடுமையையும் தலைவனின் வீரத்தையும், அக்காட்டிலுள்ள பேய்கள் காளிக்குச் சொல்லுவதையும், காளி பேய்களுக்கு உரைப்பதையும் எடுத்துச் சொல்லும் வடிவுடன் பரணி நூலானது அமையும். பரணி நாளில் பேய்கள் கூடி நிணச்சோறு( இரத்தமும் இறைச்சியும் கலந்த உணவு) அட்டு ( சமைத்து) உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடிக் களித்து போரில் வென்ற மன்னரைப் புகழும் புகழ்ச்சியைக் கூறுவது. காளிக்குக் கூளிகள் கூறுவதாக அமைவது.
கவிகள் என்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கவிகளைச் சொல்பவர்கள் ஆவார்கள். அத்தகையவருகளுள் செயங்கொண்டார் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர். இவர் முதற்குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். குலோத்துங்க சோழனுடைய புகழையும் அவனது தலைமைப் படைத்தலைவனான கருணாகரத்தொண்டைமானின் சிறப்பையும் கலிங்கத்துப் பரணி என்னும் நூலைப் பாடி நிலை நிறுத்தியவர்.
கலிங்கத்துப் பரணி பாடல்கள் விளக்க உரையுடன் இலவச டவுன்லோடு pdf