Spread the love

கதை

பாலகாண்டம்

இராவணனை அழிக்க திருமால் மனித அவதாரம் எடுக்கிறார். தசரதன் – கோசலை தம்பதியினருக்கு இராமனாக திருமால் பிறக்கிறார். தசரதனுக்கும் கைகேயி மற்றும் சுமித்திரை ஆகியோருக்கும் இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகியோர் பிறக்கின்றனர். தசரதனுடைய அரண்மனையில் வளர்ந்து வருகின்றனர்.

இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர், தன்னுடைய யாகத்திற்குக் காவலாக அழைத்துச் செல்கின்றார். விசுவாமித்திரரின் யாகத்தினை அழிக்க வந்த தாடகை எனும் அரக்கியை இராமன் கொல்கிறார். தாடகையைப் போல யாகத்தினை அழிக்க வந்த அரக்கர்களையும் இராமனும், இலக்குவனும் அழிக்கின்றனர்.

மிதிலைக்கு இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர் அழைத்துச் செல்கிறார். வழியில், கல்லாக இருந்த அகலிகை இராமனின் கால்தூசு பட்டு உயிர்பெறுகிறாள். அவளை கௌதம முனிவருடன் சேர்த்துவிட்டு மிதிலைக்குச் செல்கின்றனர். அங்கு சீதைக்கு சுயம்வரம் நடக்கிறது. அதில் இராமன் கலந்து கொண்டு சிவதனுசை உடைத்து, சீதையை மணக்கிறார்.

அயோத்தியா காண்டம்

இராமன் சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்தியாவிற்குச் செல்கிறார். உடன் இலக்குவனும், விசுவாமித்திரரும் செல்கின்றனர். அயோத்தியின் மன்னரான தசரதன் இராமனுக்கு பட்டாபிசேகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்கிறார். அதனை அறிந்த மக்களும், மந்திரிகளும் மகிழ்கின்றனர். மந்தரை எனும் கூனி பரதனின் தாயான கைகேயிடம் சென்று அவளுடைய மனதினை மாற்றுகிறாள். கைகேயி தசரதன் முன்பு தந்த இரண்டு வரங்களை இப்போதைய சூழ்நிலைக்குத் தக்கவாறு, இராமன் காடாளவும், பரதன் நாடாளவும் கேட்டுப் பெறுகிறாள்.

இராமனும், சீதையும் காட்டிற்கு செல்லுகையில், இலக்குவனும் உடன் செல்கிறான். மூவரும் காட்டிற்கு சென்று முனிவர்களையும், குகனையும் சந்திக்கின்றார்கள். குகனை தன்னுடைய மற்றொரு சகோதரன் என்று இராமன் பெருமையாக கூறுகிறார். தசரதன் இறந்து போனதால், இறுதிக் காரியங்களைச் செய்துவிட்டு பரதன் இராமனை காட்டில் வந்து சந்திக்கிறார். அயோத்திய அரசை ஏற்க இராமனிடம் வற்புறுத்துகிறார். ஆனால் இராமன் அதனை ஏற்க மறுக்கின்றார். பரதன் இராமன் மீண்டும் வந்து பொறுப்பு ஏற்கும் வரை இராமனின் பாதுகைகளை வைத்து அரசு செய்கிறான்.

ஆரண்ய காண்டம்

இராமன் காட்டில் விராதன், சரபங்கன், அகத்தியர், சடாயு ஆகியோர்களைச் சந்திக்கிறார். அவர்களின் மூலமாக அரக்கர்களைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும் அறிந்து கொள்கிறார்.

இராவணனுடைய தங்கை சூர்ப்பணகை இராமனைக் கண்டு காதல் கொள்கிறாள். ஆனால் இராமன் ஏகப்பத்தினி விரதன் என்று பிற பெண்களை ஏற்காமல் இருக்கிறான். இலக்குவன் சூர்ப்பணகையின் மூக்கினை அரிந்து அனுப்புகிறான். அதனால் இராவணனிடம் சென்று இராமனின் மனைவி சீதையைப் பற்றியும் அவளுடைய அழகினையும் கூறி, சீதையின் மீது மோகம் கொள்ள வைக்கிறாள்.

இராவணன் மாயமானை அனுப்பி இராமனையும், இலக்குவனையும் சீதையிடமிருந்து பிரித்து, சீதையைக் கவர்ந்து செல்கிறார். வழியில் சடாயு சீதையை மீட்கப் போராடி வீழ்கிறார். சீதையை இல்லத்தில் காணாது தேடி வரும் சகோதரர்களுக்கு இராவணனைப் பற்றிக் கூறிவிட்டு உயிர்விடுகிறார் சடாயு.

கிட்கிந்தா காண்டம்

சீதையைத் தேடிச் செல்கின்ற இராமனும், இலக்குவனும் கிட்கிந்தைக்கு வருகிறார்கள். அங்கு அனுமனைச் சந்திக்கிறார் இராமர். அனுமன் சுக்கிரீவன் என்பவரை இராமருக்கு அறிமுகம் செய்கிறார். சுக்கிரீவனின் மனைவியை சுக்கிரீவனுடைய அண்ணன் வாலியே கவர்ந்து சென்று விடுகிறார். அதனால் இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனின் மனைவியை மீட்கிறார்.

இராமனும் தன்னைப் போல மனைவியை இழந்து தவிக்கிறான் என்பதை அறிந்த சுக்கிரீவனும், அவனுடைய குடிமக்களான வானரங்களும் இராமனுக்கு உதவ முன்வருகிறார்கள்.

அங்கதன் என்பவர் தலைமையில் அனைவரும் செல்கின்றனர். வழியில் சம்பாதி எனும் சடாயுவின் அண்ணனைச் சந்திக்கின்றனர். சம்பாதி இலங்கையில் சீதை சிறைப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கின்றார். இலங்கைக்குச் செல்ல ஏற்றவர் அனுமன் என்று தீர்மானித்து அனுமனிடம் தெரிவிக்கின்றனர். அனுமனுக்கு அவருடைய பெருமையை உணர்த்தி அவர் இலங்கை செல்ல விஸ்வரூபம் எடுக்கிறார்.

சுந்தர காண்டம்

அனுமன் இலங்கைக்குச் செல்ல வான்வெளியில் பறந்து செல்கிறார். வழியில் எதிர்படும் தடைகளை இராம நாமம் கொண்டு வெற்றிபெற்று இலங்கையை அடைகிறார். அங்கே அசோகவனத்தில் உள்ள சீதையைக் கண்டு, தான் இராமனின் தூதுவன் என்று கூறி, இராமனின் அடையாளமான மோதிரத்தினைத் தந்து தெரிவிக்கிறார். சீதையும் அந்த மோதிரத்தினைப் பெற்றுக் கொண்டு சூளாமணி எனும் அணியைத் தருகிறாள்.

இராவணனைச் சந்தித்து அனுமன் இராமனின் பெருமைகளைக் கூறி, சீதையை இராமனிடம் சேர்த்துவிடும்படி கூறுகிறார். ஆனால் இராவணன் அனுமன் வாலில் தீயிடுகிறான். அனுமன் இலங்கையையே எரித்துவிட்டு இராமனிடம் சென்று சீதையைக் கண்டதைக் கூறுகிறார்.

யுத்த காண்டம்

இராமன் இலங்கைக்கு பாலம் அமைத்து வானரப் படையுடன் சென்று, இராவணனுடன் போர் செய்கிறான். அப்போது இராவணனின் சகோதரன் வீடணன் இராமனுடன் இணைந்து கொள்கிறான். இராமன் இராவணனுடைய தம்பியான கும்பகருணன், மகன் இந்திரசித்து என அனைவரையும் போரிட்டுக் கொல்கிறார். இறுதியாக இராவணனைக் கொன்று வீடணனுக்கு இலங்கையைத் தந்துவிட்டு, சீதையை மீட்டு அயோத்திக்குச் செல்கிறார். அயோத்தியில் இராமருக்குப் பட்டாபிசேகம் நடைபெற்றது.

By Manager

One thought on “கம்பராமாயணம் முழுவதும்- கதைச் சுருக்கம்”
  1. Im very pleased to find this site. I need to to thank you for ones time for this particularly fantastic read!! I definitely really liked every part of it and I have you bookmarked to see new information on your site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *